WFH-க்கும் ‘ஆப்பு’ வந்தாச்சு.. இதுவரை எந்த கம்பெனியும் யோசிக்காத ஒரு ‘ஐடியா’.. செம ‘ஷாக்கில்’ ஊழியர்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த பிரபல நிறுவனம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
கொரோனா பரவல் துவங்கிய பின்பு உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க அறிவுறுத்தியுள்ளது. பொதுவாக அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவதற்கும், வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு வித்தியாசம் இருக்கிறது. அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்பவர் எவ்வளவு நேரம் அமர்ந்து வேலை செய்கின்றனர் என்பதை கண்காணிக்க முடியும். ஆனால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும்போது இதை கண்காணிப்பது கடினம்.
இந்த நிலையில் கொலம்பியாவை மையாக கொண்டு செயல்படும் டெலி பெர்பாமென்ஸ் (Teleperformance) என்ற நிறுவனம் இந்த பிரச்சனையை சமாளிக்க நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், அமேசான், ஊபர் போன்ற முன்னணி நிறுவனங்களின் கால்சென்டராக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 3.96 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். அதில் கொலம்பியாவில் மட்டும் 39 ஆயிரம் பேர் வேலை பார்க்கின்றனர்.
இந்நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் அவர்கள் வீட்டில் அவர்கள் வேலை செய்வதை உறுதிப்படுத்த, அவர்கள் வேலை செய்யும் இடத்தில் கேமரா பொறுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் பகுதியில் சிசிடிவி கேமராவோ அல்லது கணினியில் கேமராவை பொறுத்தியோ அவர்கள் வேலை செய்யும் நேரத்தை கணக்கிட உள்ளனர். இதற்காக ஊழியர்களிடம் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
டெலி பெர்பாமென்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிலர் வேலை போய்விடும் என்ற பயத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலர் தனது படுக்கை அறையில் அமர்ந்து வேலை பார்ப்பதாகவும், அங்கு கேமராவை பொருத்த தான் விரும்பவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை அந்நிறுவனம் யார் வீட்டிலும் கேமரா பொறுத்தவில்லை. ஆனால் ஒப்பந்தத்தில் அதற்கான அனுமதியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.