'ஒரு வருஷம் நிம்மதியா இருந்தோமே'...'உகான் நகரை மீண்டும் துரத்த ஆரம்பித்த சோகம்'... அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது.
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா உள்பட வலுவான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட பல நாடுகளும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. ஆனால் கொரோனாவின் ஆரம்பப் புள்ளியாகக் கருதப்படும் சீனா அதன் பாதிப்பிலிருந்து மிக விரைவாகவே மீண்டது.
கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்திலேயே முழு ஊரடங்கு, சர்வதேச பயணங்களுக்குத் தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இது சாத்தியமானதாகச் சீனா தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே தொடர்ந்து பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டு சீன மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது சீனாவில் உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அந்த நாட்டில் 15 மாகாணங்களில் டெல்டா வைரஸ் கால் பதித்துப் பரவி விட்டது. குறிப்பாக, கொரோனா வைரஸ் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட உகான் நகரில் ஓராண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உகான் நகரில் தற்போது 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர். ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சீனாவை தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள நாஞ்சிங் விமான நிலையத்தில் இருந்துதான் பரவ தொடங்கியது குறிப்பிடத்தக்கது. கொரோனா குறித்த அச்சம் நீங்கி உகான் நகர மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளது.