‘இண்டெர்வியூல கேட்ட கேள்வி எதுவுமே சரியா படல’!.. இ-மெயில் மூலம் புகார் கொடுத்த பெண்.. சிக்கிய சென்னை சாப்ட்வேர் ஊழியர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இந்த வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான சரத் சந்தர், தரமணி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக பெண் ஒருவர் இ-மெயில் மூலம் தன்னிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத் சந்தர் குறிப்பிட்டிருந்தார்.
உலக வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி சரத் சந்தர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இ-மெயில் அனுப்பிய பெண்ணிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பெண், உலக வங்கியில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் தன்னை நிராகரித்த பிறகு அதே வங்கியில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றபோது வங்கி தொடர்பான கேள்விகள் கேட்காமல் உடை, உருவம் பற்றி அநாகரீகமாக கேள்வி கேட்டனர். அதனால் சந்தேகத்தில் புகார் செய்ததாக கூறினார்.
இது தொடர்பாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி (39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் உலக வங்கி அருகில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகவும், அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் கைதான அந்தோணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.