"'அமெரிக்கா'ல 'ஐ.டி' வேலை... கை நிறைய 'சம்பளம்'ன்னு வாழ்ந்தவங்க.. அத எல்லாம் உதறிட்டு... இனி இதான் நம்ம 'பாதை'ன்னு ஊருக்கே வந்துட்டாங்க... குவியும் 'பாராட்டு'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமெரிக்காவில் ஐ.டி நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் வேலை இருந்த போதும், அதனை உதறித் தள்ளி விட்டு, தன்னுடைய முக்கிய குறிக்கோளுக்காக ஊர் வந்த பெண், அதில் வெற்றியும் கண்டு அசத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி திப்பேசாமி (Swathi Thippeswamy). தனது கல்லூரி படிப்பை பெங்களூருவில் முடித்த அவர், அமெரிக்காவில் பிரபல ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை கிடைக்க வெளிநாடு கிளம்பிச் சென்றார். ஐந்து ஆண்டுகள் கை நிறைய சம்பளத்துடன் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த சுவாதியின் மனதில் ஒரு எண்ணம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.
பெங்களூரில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டரில் அமைந்துள்ள சோக்கே (Sokke) என்னும் தனது பூர்வீக கிராமத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என சுவாதிக்கு தோன்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தனது அமெரிக்க வேலையை உதறிய சுவாதி, தனது கிராமத்திற்கு வந்து பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
அதில் வெற்றியும் கண்டுள்ள சுவாதி, தற்போது கர்நாடகாவிலுள்ள தாவநாகேர் தாலுகாவில், பஞ்சாயத்து தலைவராக பணிபுரிந்து வருகிறார். முன்னதாக, தனது பூர்வீக கிராமமான சோக்கேவிற்கு அடிக்கடி சென்ற போது, கிராமத்தின் வளர்ச்சிக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என சுவாதிக்கு தோன்றியுள்ளது. அதன் முதல் படியாக, பஞ்சாயத்து தேர்தலிலும் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார்.
தனது கிராம மக்களுக்கு, கல்வி, குடிநீர், தெரு விளக்குகள், கழிப்பறைகள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு போன்ற பலவற்றை மேம்படுத்துவது என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து பேசிய சுவாதி, 'எனது முன்னோர்கள் பணியாற்றிய கிராமத்தில் நானும் சேவை செய்ய, எனக்கு இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. தேர்தலுக்காக நான் எந்த பணத்தையும் செலவாக்கவில்லை. ஊழல் நாட்டிற்கு பேரழிவை உண்டாக்கும். படித்தவர்கள் அதிகம் அரசியலுக்கு வர வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் சுவாதி, வாரத்தில் 4 நாட்கள் தனது பூர்விக கிராமத்தில் தங்கியிருந்து, தனது பணியை மேற்கொள்வேன் என்றும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிர்வாகத்தை தன்னால் கவனிக்க முடியும் என்றும் சுவாதி தெரிவித்துள்ளார்.
ஸ்வாதியின் தாத்தா, பிரிட்டிஷ் காலத்தில் சோக்கே கிராமத்தில் வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். சுவாதியின் தந்தை சோக்கே பஞ்சாயத்தின் சேர்மேனாக பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு, சுவாதியின் மருமகன் ஒருவரும் பஞ்சாயத்து தலைவராக அங்கே பணிபுரிந்த நிலையில், தற்போது தனது குடும்பத்தில் இருந்து நான்காவது ஆளாக, சுவாதி பஞ்சாயத்து அதிகாரி பொறுப்பில் அமர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
