"எப்பா சாமி, இப்படி ஒரு மோசமான 'கேப்டன்சி'ய என் வாழ்க்கை'ல பாத்ததே இல்ல.." கடுப்பாகி கொந்தளித்த 'கம்பீர்'..!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மூன்றாவது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், மேக்ஸ்வெல் (Maxwell) மற்றும் டிவில்லியர்ஸ் (Devilliers) ஆகியோர், கொல்கத்தா அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். மேக்ஸ்வெல் 78 ரன்களும் (49 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), மறுபக்கம் டிவில்லியர்ஸ் 76 ரன்களும் (34 பந்துகளில் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
இதனால், பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி, 166 ரன்கள் மட்டுமே எடுத்ததால், பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனிடையே, கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனின் கேப்டன்சி மோசமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் (Gautham Gambhir) விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, இரண்டாவது ஓவரை கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy) வீசினார். இந்த ஓவரில் கோலி (Kohli) மற்றும் ரஜத் படிதார் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வருண் கைப்பற்றினார். ஆனால், நான்காவது ஓவரை வருணிடம் கொடுக்காமல், ஷகிப் அல் ஹசனிடம் மோர்கன் (Eoin Morgan) கொடுத்தார்.
இதுபற்றி பேசியுள்ள கம்பீர், 'எனது வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான கேப்டன்சியை நான் பார்த்ததேயில்லை. ஒரு பந்து வீச்சாளர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த போதும், அதற்கடுத்த ஓவரை அவரை வீச அனுமதிக்கவில்லை. பவர் பிளே ஓவர்களில் வருண் நிச்சயம் திரும்ப வீசியிருந்தால், மேக்ஸ்வெல் விக்கெட்டைக் கூட வருண் வீழ்த்தியிருக்கலாம். பெங்களூர் அணியின் ஆட்டமும் அப்போதே முடிந்திருக்கக் கூடும்.
ஒரு இந்தியன் கேப்டன் இப்படி ஒரு தவறை செய்யவில்லை என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அப்படி ஒரு இந்திய கேப்டன் இந்த செயலை செய்திருந்தால், உடனே முந்திக் கொண்டு விமர்சனம் செய்ய வந்திருப்பார்கள். நான் பார்த்ததில், ஒரு அபத்தமான கேப்டன்சி என்றால் மோர்கனின் இன்றைய கேப்டன்சியை தான் கூறுவேன். என்னால் அதனை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை' என மோர்கனை கடுமையாக விமர்சனம் செய்து கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதுவரை கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், இரண்டு சீசன்களிலும் கம்பீரே கொல்கத்தா அணியை தலைமை தாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.