'சென்னை மக்களே கவனம்'... '68 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் கொளுத்திய வெயில்'... மே மாதம் எப்படி இருக்க போகுதோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நேற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகு 106 டிகிரி வெயில் கொளுத்தியுள்ளது.
தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தற்போது வெயில் கொழுத்த ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடையும். அப்போது வெயிலின் தாக்கம் உக்கிரத்தில் இருக்கும். ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் சென்னையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-வது வாரத்திலிருந்தே வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்னும் கடல்மட்ட வெப்பம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் வெப்பக் காற்று வீசிவருகிறது. கடலிலிருந்து வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் கரைப்பகுதியை நோக்கி வீசும் காற்று வெப்பமாக உள்ளது. இந்த வறண்ட வானிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கடந்த 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி 105 டிகிரி வெயில் கொளுத்தியது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்குச் சென்னையில் வெயில் 106.34 டிகிரியாக அதிகரித்தது. திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களிலும் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் மாவட்டத்தில் 104 டிகிரியாக பதிவானது. தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இதற்கிடையே ஏப்ரல் 2-ந்தேதி முதல் வடமேற்கு திசையிலிருந்து தமிழகத்தை நோக்கி தரைக்காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் அளவு 2 முதல் 3 டிகிரி வரை அதிகரிக்கும். இதனால் மே மாதம் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இப்போதே எழ ஆரம்பித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவற்றை அடிக்கடி அருந்துமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.