'சூர்யகுமார்' பத்தி 'கங்குலி' சொன்ன 'விஷயம்'... "அவரே சொல்லிட்டாரு, இதுக்கு மேல என்ன வேணும்??.." மகிழ்ச்சியில் 'ரசிகர்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளை ஆடவுள்ளது.
இதற்கான இந்திய அணியை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது முதல் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பரபரப்பு நிலவி வருகிறது. ஐபிஎல் தொடரில் இருந்து சில இளம் வீரர்கள் அணியில் தேர்வாகியிருந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறாமல் போனது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
பல முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பிசிசிஐ-யின் தேர்வுக் குழுவுக்கு எதிராக குரல்கள் அதிகம் எழுந்தன. இதனிடையே, பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்த சூர்யகுமார், அந்த போட்டியின் இறுதியில் செய்த செயல் மற்றும் கோலியிடம் முகத்திற்கு நேராக எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டது என அந்த போட்டியின் சில நிகழ்வுகள் அதிகம் வைரலானது.
இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சூர்யகுமார் விவகாரம் குறித்து மவுனம் காத்து வந்த நிலையில், முதல் முறையாக அவர் இதுகுறித்து பேசியுள்ளார். 'சூர்யகுமார் மிகச் சிறந்த வீரர். அவருக்கான நேரம் வரும்' என தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவரான கங்குலியே சூர்யகுமார் குறித்து பேசியதால், இனிவரும் தொடர்களில் அவருக்கு சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அதோடு இந்த ஐபிஎல் தொடரில், தன்னை மிகவும் கவர்ந்த இளம் வீரர்களின் பெயர்களையும் கங்குலி தெரிவித்துள்ளார். சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, தேவ்தத் படிக்கல், சுப்மான் கில் ஆகியோர் இந்த முறை சிறப்பாக ஆடியதாக கங்குலி குறிப்பிட்டுள்ளார்.