'நெருங்கிய முகூர்த்த நேரம்'... 'தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் சொன்ன பதில்'... 'என்னம்மா, இப்போ வந்து இத சொல்ற'... நொறுங்கிப்போன மாப்பிள்ளையின் குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகனின் சம்மதம் என்பது முக்கியமானது. அதைப் பெறப் பெற்றோர்கள் தவறும் போது நிச்சயம் யாராவது ஒருவர் பாதிக்கப்படுவர். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள பாளைய ஏகாம்பரநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். அந்த இளைஞருக்கு அவரது பெற்றோர் திருமணத்திற்கு வரன் பார்த்து வந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா வேலங்காடு பகுதியைச் சேர்ந்த நர்சிங் பயிற்சி முடித்த இளம்பெண்ணோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இதற்காகப் பத்திரிகை அடிக்கப்பட்டு, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. திருமணம் நேற்று காலை கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. அதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு மணமக்கள் வரவேற்புடன், விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பலரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்றார்கள்.
அடுத்த நாள் காலையில் திருமணம் நடைபெற்ற இருந்ததால் இரு வீட்டாரும் திருமண வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நேற்று முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், மணமகன் வேஷ்டி சட்டை கட்டி திருமணத்திற்குத் தயாரானார். மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்யவிருந்த நிலையில், அவர் சொன்ன பதில் மொத்த குடும்பத்திற்கும் இடியாய் இறங்கியது. ''எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், எனக்கு மேற்படிப்பு படிக்க வேண்டும்'' என மணப்பெண் கூறியுள்ளார்.
மணப்பெண்ணின் பதிலைக் கேட்டு அதிர்ந்துபோன மணமகனின் பெற்றோர், ''என்னம்மா இப்போ வந்து இப்படி சொல்ற, என் பையன் என்ன தப்பு செஞ்சான், தாலி கட்டுற நேரத்தில் இப்படிச் சொன்ன எப்படி? நேத்து வரவேற்பு நடந்த நேரம் கூட நீ ஒண்ணும் சொல்லலியே'' என கேட்டு கண்கலங்கினார்கள். மணமகனோ நடப்பது ஒன்றும் புரியாமல் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார்.
இதனிடையே மணப்பெண்ணின் உறவினர்களும், பெற்றோரும் அவரை சமரசம் செய்ய முயன்றும் மணமகள் விடாப்பிடியாகத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இதனால் மணமகனின் பெற்றோர், உறவினர்கள் சோகத்துடன் திருமண மண்டபத்திலிருந்து சென்றுவிட்டனர். இதுபற்றி அறியாத உறவினர்கள் சிலர் திருமணத்திற்காக மண்டபத்துக்கு வந்தனர். அப்போது திருமணம் நின்றது குறித்துத் தெரிந்த உடன் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் மணப்பெண்ணின் இந்த திடீர் முடிவுக்குப் படிப்புதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா? எனப் புரியாமல் உறவினர்கள் குழம்பி நின்றனர். இதற்கிடையே திருமண பேச்சை எடுக்கும் முன்பு, திருமணம் செய்து கொள்ளும் பெண் அல்லது ஆணின் சம்மதத்தைப் பெற்றோர் ஒரு முறை அல்ல, பல முறை உறுதி செய்து கொள்ள வேண்டும். அல்லது இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அது பல கனவுகளுடன் வரும் ஆணையோ அல்லது பெண்ணையோ நிச்சயம் பாதிக்கும்.

மற்ற செய்திகள்
