'அப்பறோம் தம்பி, கல்யாணத்தை எங்க வச்சு இருக்கீங்க'... 'கல்யாண கார்டை பார்த்து வாயடைத்து போன சொந்தக்காரர்கள்'... சென்னையில் நடந்த அசத்தல் திருமணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண நிகழ்வு என்பது, எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத மிக முக்கிய தருணமாகும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் புடை சூழ தங்களது வாழ்க்கைத் துணையுடன் இனி வாழ்நாள் முழுவதும் வாழப் போகும் ஒரு பெரும் புள்ளியின் தொடக்க புள்ளியாக திருமணம் அமையும்.

அப்படிப்பட்ட முக்கிய நிகழ்வை இன்னும் சுவாரஸ்யமாக, தங்களின் மனதில் மட்டுமல்லாமல் அனைவரின் மனதிலும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் படியான சம்பவம் ஒன்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியர்கள் செய்து அசத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சின்னதுரை என்பவருக்கும், கோயம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தனது திருமணத்தை சற்று வித்தியசமாக நடத்த வேண்டும் என சின்னதுரை திட்டமிட்டுள்ளார். முன்னதாக, ஆழ்கடலில் நீச்சல் பயிற்சியை சின்னதுரை மேற்கொண்டு வந்துள்ளார்.
அதன்படி, தனது திருமணத்தை கடலுக்கு அடியில் வைத்து நடத்த வேண்டும் என்ற தனது விருப்பத்தை பெற்றோர்களிடம் சின்னதுரை தெரிவித்துள்ளார். பெற்றோர்களும் தனது ஆசைக்கு ஒப்புக் கொண்ட நிலையில், புதுச்சேரி பகுதியிலுள்ள ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவரை மணமக்கள் அணுகியுள்ளனர்.
தங்களின் கனவு திருமணத்திற்கு தயாராகும் வகையில் இருவரும் சில நாட்கள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரை பகுதியில் இன்று காலை பாரம்பரிய உடைகள் அணிந்து படகின் மூலம் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணமக்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு பின் கடலுக்கு அடியில் வைத்து திருமணம் நடைபெற்றது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 30 அடி ஆழத்தில் மலர்களை கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் திருமணம் நடைபெற்றது.
பரஸ்பரம் மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், வித்தியாசமாக நடந்த இந்த திருமணம் பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது. அது மட்டுமில்லாமல், இந்தியாவில் ஆழ்கடலில் வைத்து நடைபெற்ற முதல் திருமணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
