'AMAZON PRIME, NETFLIX' போன்ற OTT தளங்களுக்கு கட்டுப்பாடு'... 'இனிமேல் வெப் சீரிஸில் இது கட்டாயம்'... மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாAmazon Prime, Netflix, OTT தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால், மக்களுக்கு டிவி மட்டுமே ஒரே பொழுதுபோக்காக மாறி போனது. அந்த நேரம் இந்தியாவின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் அசுர வளர்ச்சி பெற்றன. முதலில் இவற்றில் வெப் சீரிஸ்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய திரைப்படங்கள் வெளியீடு, கிரிக்கெட் தொடர்கள் ஒளிபரப்பு என அடுத்தகட்ட நிலைக்குச் சென்றுள்ளது.
வெப் சீரிஸ்கள் பார்க்காதவர்கள் கூட அதை பார்க்கும் ஆர்வத்தை OTT தளங்கள் தூண்டின. அதே நேரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகும் தொடர்களில் சர்ச்சை நிறைந்த பல கருத்துகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எந்த தணிக்கையும் செய்யப்படாமல் சுதந்திரமாக வெளியிடப்படுவதால் இணையதள சினிமாக்களால் சமூகத்தில் பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஓடிடி தளங்களை வரைமுறைப்படுத்த ஒரு தன்னாட்சி அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்கக் கடந்த அக்டோபரில் உத்தரவிட்டது. இதற்கிடையே ஆன்லைன் மீடியாக்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாகத் தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் கூறியிருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலகம் கடந்த டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில், ஆன்லைன் தளங்களான நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி, ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி இயங்குதளங்கள் உள்ளிட்டவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஒடிடி தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.
- ஓடிடியில் வெளியாகும் வெப் சீரிஸ்கள் எத்தகைய வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்ப்பதற்கு உரியது என்பதைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
- ஓடிடியில் 13+, 16+, Adult எனத் திரைப்படங்களை வகைப்படுத்த வேண்டும்
- சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசு அல்லது நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால் 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும்
- புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்த ஆபாச புகைப்படங்களை சமூகவலைத்தளம் நீக்க வேண்டும்
- ஒவ்வொரு சமூக வலைத்தள நிறுவனங்களும் மாதம் ஒரு முறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல் வழங்க வேண்டும்
- புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்
- தவறான தகவலை பரப்பக்கூடிய முதல் நபர் யான் என்ற விஷயத்தை சமூக வலைதளங்கள் கண்டறிய வேண்டும்
- அரசு நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைத்தளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும்
- ஒருவரின் கணக்கை நீக்கினால் அதுகுறித்த விவரத்தை சம்மந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனம் தர வேண்டும் என தெரிவித்துள்ளது.