‘சினிமாவை விமர்சிப்பதை தவிர்ப்போம்’.. கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை முக்கிய அட்வைஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளி சமயத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்திரைப்படத்தில் இடம்பெற்ற காலண்டர் ஒன்று வன்னியர் சமூகத்தை குறிப்பதாக சர்ச்சை எழுந்தது. கடந்த ஒரு வாரமாக இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவர் சமீபத்தில் மாநாடு திரைப்படத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். மேலும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து இதுபோன்று திரைப்படங்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் வந்தால், அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறுமில்லை. சில இடத்தில் பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களை கடுமையாக பதிவு செய்திருக்கின்றது.
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குனரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த, படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சியின் சகோதர, சகோதரிகள் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது, எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும். பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.
நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாக செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்த தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
