எனக்கு பரிசு வேண்டாம்ங்க.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பரிசை புறக்கணித்த பள்ளி மாணவி.. என்ன நடந்துச்சு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்அவனியாபுரம்: ஜல்லிக்கட்டில் பங்கேற்ற பள்ளி மாணவிக்கு பரிசு அறிவித்தும் அதை வாங்காமல் சென்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
புது வருடம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பண்டிகை தான். இந்த வாரம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டு பொங்கல் என்றாலே கிராமப்புறங்களில் வெகுவாக கொண்டாடப்படும். அதோடு நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் என பல நிகழ்வுகள் நடக்கும். அதில் முக்கியமானது நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு என்றாலே அனைவரது கவனத்திலும் வருவது மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவினியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். இந்நிலையில் நேற்று புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.
இந்த நிலையில், மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி என்னும் மாணவி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அதனை எதிர்த்து தமிழகமே ஒன்றுக்கூடி போராட்டம் நடத்தியபோது ஜல்லிக்கட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டார்.
வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு:
மாணவியின் தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்த்து வருகின்றனர். இதனை அவர்கள் நேர்த்தியாக பராமரிப்பதைக் கண்ட மாணவிக்கு தனக்கும் ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இந்நிலையில் நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கியுள்ளார். அப்போது அவரது காளை மடக்கி பிடித்து பிடிமாடாக ஆனது.
சிறப்பு பரிசு வேண்டாம்:
தோற்றாலும், விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு பரிசு வழங்க அழைத்தனர். ஆனால் இதனை வாங்க மறுத்து யோகயோகதர்ஷினி வெளியேறினார். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, அந்த மாணவியிடம் பரிசை பெற்று செல்லுமாறு மைக்கில் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெயிக்காத பரிசு தனக்கு வேண்டாம் என்று அங்கிருந்து கிளம்பியுள்ளார்.
ஒருநாள் வெல்லும்:
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளை களமிறங்கியபோது வெற்றி பெறும் நம்பிக்கையோடு இருந்தார். தோல்வி அடைந்தாலும், வெறுமனே பங்கேற்றதற்காக அளிக்கப்பட்ட பரிசை வாங்காமல் சென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவ்வளவு தன்னம்பிக்கையோடு இருக்கும் மாணவியின் காளை கண்டிப்பாக ஒருநாள் வெல்லும்.