காளான் பறிக்க போன பெண்கள்.. திடீர்ன்னு பாஞ்ச துப்பாக்கி குண்டு.. கொலையாளி சொன்ன குலை நடுங்கும் வாக்குமூலம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காளான் பறிக்க போன பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், இதற்கான காரணம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த பெரியவளையம் என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி. இந்த இரண்டு பெண்களும் அங்குள்ள காட்டுப் பகுதியில் காளான் பறிக்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்படி ஒரு சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக காளான் பறிக்க சென்றிருந்த மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கொடூரமாக காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம், அக்கிராம மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அரியலூர் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அப்பகுதியில் வேட்டையாடும் கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் என்ற நபரை சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரித்தனர்.
அப்போது மலர்விழி மற்றும் கண்ணகி ஆகிய இரண்டு பேரையும் கொலை செய்ததையும் பால்ராஜ் ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், கொலை நடந்தது குறித்து பால்ராஜ் தெரிவித்துள்ள தகவலும் பலரையும் குலை நடுங்க வைத்துள்ளது. வழக்கமாக அதிகாலை வேளையில் காட்டுப்பன்றி வேட்டைக்காக பால்ராஜ் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது மலர்விழி மற்றும் கண்ணகி ஆகிய இரண்டு பேரும் காளான் பறிக்க வருவதை கவனித்த பால்ராஜ், அவர்களின் நகையை பறிக்க திட்டம் போட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படி இருக்கையில், சம்பவத்தன்று புதருக்குள் அசைவு கேட்டதால் தனது நாட்டு துப்பாக்கி மூலம் அங்கே சுட்டதாகவும், அப்போது கண்ணகியின் உடலில் குண்டு பட்டு அவர் அலறியதாகவும் தெரிய வந்துள்ளது. இதனை அறிந்து மலர்விழியும் பால்ராஜிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட, ஆத்திரம் அடைந்த அவர் துப்பாக்கியின் பின்புறம் கொண்டு மலர்விழியை சரமாரியாக தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிகிறது.
இதனை கண்ட கண்ணகி, செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க முயற்சி செய்ய, ஆத்திரம் அடைந்த பால்ராஜ், செல்போனை வாங்கி ஸ்விட்ச் ஆப் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரை கொலை செய்த பால்ராஜ், மலர்விழி அணிந்திருந்த சுமார் 6.5 பவுன் நகையை பறித்து கொண்டு காரைக்கால் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பால்ராஜிடம் இருந்து நகை, துப்பாக்கி உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். காளான் பறிக்க சென்ற பெண்களுக்கு நேர்ந்த சம்பவமும் அதன் பின்னால் உள்ள காரணமும் திடுக்கிட வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
