"மனசுக்குள்ள அவரை திட்டுனேன்.. ஆனா".. பரபரப்பான மேட்ச்.. கடைசி ரன் அடிக்கும் முன் நடந்தது என்ன??.. அஸ்வின் பகிர்ந்த விஷயம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு8 வது டி 20 உலக கோப்பைத் தொடர், ஆஸ்திரேலியாவில் வைத்து தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் சூப்பர் 12 சுற்றுகளும் அமோகமாக நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் ஒவ்வொரு போட்டியும் இந்த சுற்றில் முக்கியம் வாய்ந்தது என்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஒரு போட்டியில் விளையாடி உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த இந்த போட்டியில், கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி வரை களத்தில் நின்று அதிரடி காட்டிய கோலியையும் கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டி இருந்தனர்.
டி 20 உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும் இந்தியா இருப்பதால், கோப்பையை கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கையிலும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற போது நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. கடைசி பந்தில் வைடு வாங்கிய அஸ்வின், அடுத்த பந்தில் கூலாக ரன் அடித்திருந்தார்.
அப்போது நடந்தது பற்றி பேசும் அஸ்வின், "நான் ஒரு பந்தில் 2 ரன் தேவை என இருந்த போது பேட்டிங் ஆட சென்றேன். அப்போது சந்திரமுகி படத்தில் ஜோதிகா "ஓதலவா" என சொல்வது போல இங்கே அடி, அங்கே அடி என கோலி என்னிடம் கூறினார்" என அஸ்வின் தெரிவித்தார்.
அதே போல, தினேஷ் கார்த்திக் அவுட் ஆனதால் தான் இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்க வேண்டிய நிலை, அஸ்வினுக்கு உருவாகி இருந்தது. இது பற்றி பேசிய அஸ்வின், "களத்தில் இறங்கவே பதற்றமாக இருந்தது. தினேஷ் கார்த்திக்கை படுபாவி என்றும் மனதில் திட்டிக் கொண்டேன். இருந்தாலும் மனதை சீராக்கிக் கொண்டு ஆடினேன்.
நான் சந்தித்த முதல் பந்தை வைடாக வீசியதும் நமக்கும் அந்த பந்துக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல நின்று கொண்டேன். அந்த ஒரு ரன் கிடைத்ததும் மனதில் அப்படி ஒரு குதூகலம். அடுத்த பந்தை சரியாக அடித்து விட்டால் போதும் என்று இருந்தது. ஹாரிஸ் ராஃப் ஓவரில் கோலியை சிக்ஸர்கள் அடிக்க வைத்த கடவுள், நாம் அடிக்கும் பந்தை ஃபீல்டர் மீது விட மாட்டாரா என்று நினைத்து அடித்தது தான் அது" என தெரிவித்துள்ளார்.
கடைசி வரை களத்தில் நின்று அதிரடி காட்டிய கோலியை ரசிகர்கள் பாராட்டியது போல, கடைசி பந்தில் கூலாக வெற்றி இலக்கை எட்ட உதவிய அஸ்வினையும் பலர் பாராட்டி இருந்தனர்.