பார்வையாளராக வந்து கிராண்ட் மாஸ்டரையே தோற்கடித்த 7 வயது அரியலூர் சிறுமி.. அவரே மிரண்டு போய்ட்டாரு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஒலிம்பியாட் செஸ் போட்டியை காண சென்ற சிறுமி ஒருவர் கிராண்ட் மாஸ்டரையே வெற்றி கொண்டிருக்கிறார். இது பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணி 6 அணிகளாக களமிறங்கியுள்ளது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிகளை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகிறார்கள்.
சுவாரஸ்யம்
போஸ்வானாவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென். இவர் நேற்று தனது போட்டியை முடித்துவிட்டு, போட்டிகளை காண வந்திருந்த பார்வையாளர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அவர்கள் இருந்த இடத்துக்கு பக்கத்தில் செஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. பார்வையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த டிங்க்வென் யாரேனும் என்னுடன் செஸ் விளையாட தயாரா? என கேட்டிருக்கிறார். அப்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண வந்திருந்த 7 வயதான சிறுமி ஷர்வானிகா தான் விளையாட ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை எதிர்பாராத டிங்க்வென், அவரை அருகில் அழைத்திருக்கிறார். இருவருக்கும் இடையேயான ஆட்டம் துவங்கிய உடனேயே அந்த இடமே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. நேரம் செல்ல செல்ல கிராண்ட் மாஸ்டரின் ஒவ்வொரு மூவ்களுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார் அந்த சிறுமி. இதனால் வேறு இடத்தில் இருந்தவர்களும் அந்த போட்டியை காண குவிந்திருக்கிறார்கள்.
பாராட்டு
இந்நிலையில், குறைவான மூவ்களில் ஷர்வானிகா வெற்றிபெற்றிருக்கிறார். இதனை கண்ட டிங்க்வென் உடனடியாக அந்த சிறுமியை தூக்கி தோளில் வைத்தபடி அவருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும், தொடர்ந்து பயிற்சி பெற்று இந்தியா சார்பில் செஸ் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் வாழ்த்தினார்.
அறியலூரை சேர்ந்த ஷர்வானிகாவுக்கு சிறுவயதில் இருந்தே செஸ் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருப்பதாகவும், ஆசிய அளவிலான போட்டியில் இந்தியா சார்பில் விளையாட அவர் தேர்வாகியுள்ளதாகவும் அவரது பெற்றோர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் உதவி கிடைத்தால் வெளிநாட்டு போட்டிகளுக்கு பயணம் மேற்கொள்வோம் என்று அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.