"சீக்கிரம் வாங்க சார் தலைகீழா மாட்டிக்கிட்டேன்".. விடிகாலை 3 மணிக்கு போலீசுக்கு வந்த போன்.. ஸ்மார்ட் வாட்சால் தப்பித்த பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள இயந்திரத்தில் தலைகீழாக சிக்கிக்கொண்ட நிலையில், காவல் துறையினரின் உதவியால் அவர் மீட்கப்பட்டிருக்கிறார்.

உடற்பயிற்சி
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் ஃபால்ட்ஸ். தினந்தோறும் அருகில் உள்ள உடற் பயிற்சி நிலையத்திற்கு செல்லும் வழக்கம் கொண்ட இவர் டிக்டாக்கில் வீடியோக்களையும் பதிவிட்டு வந்திருக்கிறார். இதனாலேயே இவரை பலர் ஆர்வத்தோடு பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்டின் ஃபால்ட்ஸ் சில தினங்களுக்கு முன்னர் வழக்கமாக செல்லும் உடற் பயிற்சி நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அதிகாலை 3 மணி என்பதால் உடற் பயிற்சி நிலையத்தில் ஓரிரண்டு பேர் மட்டுமே இருந்திருக்கின்றனர். அப்போது, வழக்கம்போல தான் செய்யும் பயிற்சியை வீடியோ எடுக்க முடிவெடுத்திருக்கிறார் கிறிஸ்டின். இதனால் அருகில் இருந்த டேபிளில் தனது போன்மூலம் வீடியோ ரெக்கார்டு செய்ய துவங்கியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு, முதுகு வலியை குறைக்க செய்யப்படும் பயிற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார். தலைகீழாக உடலை நிறுத்தும் பயிற்சில் அவர் ஈடுபடும்போதுதான் அந்த விபரீதம் நடைபெற்றிருக்கிறது.
உதவி
தலைகீழாக அவர் தொங்கிய நிலையில், அவரால் எழ முடியாமல் போயிருக்கிறது. எவ்வளவு முயன்று பார்த்தும் அதில் இருந்து வெளியேற முடியாததால் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார் கிறிஸ்டின். ஆனால், அப்போது அங்கிருந்த சிலரும் வெளியே சென்றிருந்ததால் அவருக்கு தக்க நேரத்தில் உதவி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்கிறார். அந்த வேளையில்தான் தனது கையில் இருந்த ஸ்மார்ட் வாட்ச் ஞாபகம் அவருக்கு வந்திருக்கிறது.
உடனடியாக காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 911 க்கு வாட்ச் மூலமாக போன் செய்திருக்கிறார் கிறிஸ்டின். தான் உடற் பயிற்சி நிலையத்தில் தலைகீழாக சிக்கிக்கொண்டதாகவும் தன்னை மீட்கும்படியும் உதவி கேட்டிருக்கிறார் அவர். இதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த உடற் பயிற்சி நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். ஒருவழியாக உடற் பயிற்சி கருவியில் சிக்கிக்கொண்ட அவரை அதிகாரிகள் மீட்டிருக்கின்றனர். மேலும், போதிய உதவி இல்லாத நிலையில் இதுபோன்ற கடினமான உடற் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என அவருக்கு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்
