பூஸ்டர் டோஸ் போடுவதற்கு போனில் அழைத்து மோசடியில் ஈடுபடும் மர்ம கும்பல் - உஷார் மக்களே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்ப் பரவல் உச்சத்தில் இருக்கிறது. அதைச் சமாளிக்க 60 வயதுக்கு மேற்பட்ட தகுதி உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடச் சொல்லி மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த விஷயத்தை வைத்து ஒரு மர்ம கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தக் கும்பல் தன் கை வரிசையைக் காட்டுவது இப்படித்தான். முதலில் அவர்கள் 60 வயதைத் தாண்டிய சீனியர் சிட்டிசன்களின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு தொடர்பு கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து மோசடி கும்பல், ‘நீங்கள் இதுவரை இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்கள். மூன்றாவது டோஸ் செலுத்த கால அவகாசம் நெருங்கி விட்டது. அரசின் அறிவுரையை ஏற்று மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொல்வார்கள்.
அனைத்து விபரங்களையும் சரியாக சொல்கிறார்களே என்று ஏமாறும் மூத்த குடிமக்கள், அவர்களை நம்பி விடுகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த மோசடி கும்பல், ஒரு லிங்க்-ஐ மொபைலுக்கு அனுப்புகிறது. அதில் பல்வேறு விபரங்களைப் பதிவிடுமாறு வற்புறுத்துகிறார்கள். இதைத் தொடர்ந்து மீண்டும் போன் மூலம் அழைத்து, ‘உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வந்திருக்கும். அதைக் கூறவும்’ என்று சொல்கிறார்கள்.
அந்த ஓடிபி எண்ணைச் சொன்னவுடன், வங்கியில் இருக்கும் பணத்தை சுருட்டி விடுகிறார்கள். போன் அழைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டு விடுகிறதாம். இப்படி சில மூத்த குடிமக்கள், தங்கள் பணத்தை இழந்து போலீஸில் புகார் தெரிவித்து வருகிறார்கள் எனத் தகவல்.
இதைத் தொடர்ந்து இதைப் போன்று மொபைல் எண் மூலம் தொடர்பு கொண்டு பூஸ்டர் டோஸ் பற்றி பேசுபவர்களையும், தனிப்பட்ட விபரங்களைக் கேட்பவர்களையும் நம்ப வேண்டாம் என்று போலீஸ் தரப்பு எச்சரிக்கை செய்துள்ளது.