அதிமுக 49-வது ஆண்டு ‘தொடக்க விழா’.. சொந்த ஊரில் கட்சி கொடியை ஏற்றிய முதல்வர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தனது சொந்த கிராமத்தில் அதிமுக கட்சிக் கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

கடந்த 1972-ஆம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, இன்றுடன் 48 ஆண்டுகள் நிறைவடைந்து 49-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள கழகத் தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதிமுக 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் இன்று (17.10.2020) காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார். பின்னர் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
தனது வீட்டில் இருந்து விழா மேடை அமைந்துள்ள பகுதி வரை நடந்து சென்ற முதல்வர், அங்கு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார்.
இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், அம்மா பேரவை மாவட்டத் தலைவர் மாதேஷ், எடப்பாடி தெற்கு ஒன்றியச் செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்
