ஒரே வீட்டுக்கு 7 பேரிடம் அட்வான்ஸ்.. ஆன்லைனில் வீடு தேடியவருக்கு வந்த சோதனை.. போலீஸ் விசாரணையில் வெளியான திடுக் தகவல்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆன்லைனில் வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நபரை பிடிக்கும் முயற்சியிலும் காவல்துறை இறங்கியுள்ளது.

கொடுங்கையூர் அம்பிகா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். 29 வயதான இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வாடகை வீட்டில் இருக்கும் மணிகண்டன் குத்தகைக்கு வீடு தேடும்போது ஆன்லைன் மூலமாக கோபி மஹாராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது, தனது வீட்டுக்கு வரும்படி கோபி கூறியுள்ளார். இதை கேட்டு மணிகண்டனும் அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அந்த வீட்டில் கோபி, ஒரு பெண் மற்றும் அவரது மகன் இருந்திருக்கின்றனர். அப்போது, தங்களுக்கு முத்தமிழ் நகர் 3வது தெரு காவேரி சாலை பகுதியில் தங்களுக்கு சொந்தமான வீடு உள்ளது என்றும் அதனை 5 லட்ச ரூபாய்க்கு லீஸுக்கு விட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து, அந்த வீடு மணிகண்டனுக்கு பிடித்துப்போகவே 2 லட்ச ரூபாயை அட்வான்ஸாக கொடுத்திருக்கிறார். கடந்த நவம்பர் 23 ஆம் தேதி மணிகண்டன் பணத்தை கொடுத்துவிட்டு அடுத்த மாதம் புதுவீட்டுக்கு குடிபெயர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இருப்பினும் கோபி வீட்டினை கொடுக்காததால் சந்தேகமடைந்த மணிகண்டன் தனது நண்பருடன் கோபியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, கோபி மற்றும் அந்த வீட்டில் இருந்த இளைஞர் சேர்ந்து துப்பாக்கியை காட்டி மணிகண்டனை மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோபியின் வீட்டில் இருந்தது அவரது மனைவி மற்றும் மகன் இல்லை என்பதும், அவர்களிடத்தில் இருந்தது டம்மி துப்பாக்கி என்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும், லீஸுக்கு விடுவதாக கோபி சொன்ன வீடு கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் கோபி மகாராஜாவின் மனைவி எனக் கூறிய அம்பிகா, அவரது மகன் பிரவீன் ராஜ் மற்றும் அந்த வீட்டை லீசுக்கு விட்ட குமார் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், கோபி மகாராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். அடுத்தவரின் வீட்டை காண்பித்து இதுவரை 7 பேரிடம் ரூ.36 லட்சம் வரை இவர்கள் ஏமாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | ரொம்ப நாளைக்கு அப்புறம்... சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த் .. ஃபோட்டோ பகிர்ந்து ட்வீட்..!

மற்ற செய்திகள்
