'எங்க வீட்டு குலதெய்வமே போயிடுச்சு!'.. மனைவியின் பிரிவால் ஜவுளிக்கடை உரிமையாளர் விபரீத முடிவு!.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 4 பேர் பலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆண்டிப்பட்டி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் ஜவுளிக்கடை உரிமையாளர், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 55). இவர் ஆண்டிப்பட்டியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு வசந்த் (25), சசிக்குமார் (19), குருதாஸ் (13) ஆகிய 3 மகன்கள் இருந்தனர். இதில், வசந்த் தனது தந்தையுடன் ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். சசிக்குமார், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். குருதாஸ், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையே கொரோனா பாதிப்பு காரணமாக ராஜஸ்தானில் வேலை செய்து வந்த சசிக்குமார் கடந்த மே மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது தேனி மாவட்ட சோதனை சாவடியில் உள்ள மருத்துவ முகாமில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அவர் போடியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
அதன்பிறகு சில நாட்களில் பரிசோதனை முடிவு வெளியானது. அதில், சசிக்குமாருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தும் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டார். இதனால் தனது பெற்றோரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த சசிக்குமார், கடந்த மே மாதம் 17-ந்தேதி தனிமைப்படுத்தும் முகாமின் கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது அவரது குடும்பத்தினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், சசிக்குமார் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தாய் ராமலட்சுமி மிகுந்த மனவேதனையில் இருந்தார். இதற்கிடையே தொடர்ந்து மன கவலையில் இருந்து வந்ததால் ராமலட்சுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீட்டிற்கு வந்த ராமலட்சுமி, நேற்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென்று உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து விவரத்தை கூறினார். அதன்படி உறவினர்கள், ராமலட்சுமியின் உடலை அடக்கம் செய்வதற்கான பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில் மனைவியும், 2-வது மகனும் அடுத்தடுத்து இறந்ததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மணிகண்டன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக அவர் நேற்று காலை 6 மணி அளவில் தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். இதை பார்த்த அவரது மூத்த மகன் வசந்த் தானும் உடன் வருவதாக கூறி சென்றார். பின்னர் தந்தை, மகன் 2 பேரும் தங்களது ஜவுளிக்கடைக்கு சென்று, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு கடைக் குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கிடையே கடைக்கு சென்ற மணிகண்டனும், அவரது மகனும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கடைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜவுளிக்கடையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கடையின் பூட்டை உடைத்து உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டனும், வசந்தும் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர்.
இதுகுறித்து உடனடியாக ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிகண்டன், வசந்த் ஆகியோரது உடல் களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது 2-வது மகன் இறந்த துக்கம் தாங்காமல் ராமலட்சுமியும், மனைவி, 2-வது மகன் இறந்த விரக்தியில் ஜவுளிக்கடை உரிமையாளர், தனது மூத்த மகனுடனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்திருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.