'பெண் மருத்துவர் வீட்டில் பேரதிர்ச்சி கொடுத்த காட்சிகள்'... 'சாப்பாட்டில் மயக்க மருந்து, விஷ ஊசி'... 'ஒரே நாளில் சிதைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாநாக்பூரில் விஷ ஊசிப்போட்டு கணவர், 2 குழந்தைகளை கொலை செய்த பெண் மருத்துவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாக்பூர் கோராடி ஓம் நகரை சேர்ந்த தீரஜ் (42) என்பவர் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருடைய மனைவி சுஷ்மா (41) மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 11, 5 வயதுடைய 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களுடன் வீட்டில் வசித்து வந்த அத்தை ஒருவர், படுக்கை அறை வெகுநேரமாக பூட்டப்பட்டு இருந்தைப் பார்த்து கதவை தட்டி பார்க்க, எந்த பதிலும் வராமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சுஷ்மா மின்விசிறியில் போடப்பட்ட தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படுக்கையில் அவருடைய கணவர் மற்றும் 2 குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அங்கு நடத்திய சோதனையில் ஊசி மருந்து, சிரிஞ்ச் மற்றும் கடிதம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் கடிதத்தில் சுஷ்மா, வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாததால் இந்த முடிவை எடுத்ததாக எழுதி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், சுஷ்மா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுக்க, அதை சாப்பிட்ட 3 பேரும் சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்ததும், பின்னர் அவர்களுக்கு விஷஊசி மருந்தை உடலில் செலுத்தியதும் தெரியவந்துள்ளது. அதன்பிறகு அவர்கள் 3 பேரும் உயிரிழந்ததை உறுதி செய்துவிட்டு சுஷ்மா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
