'மாமியார்-மருமகள்' ஒன்றாக சாப்பிட்டால் '50%' கட்டணம் 'இலவசம்'... ஒருவருக்கொருவர் 'ஊட்டி' விட்டால் '100%' இலவசம்... சம்பவத்தை காண 'ஆவலுடன்' காத்திருக்கும் ஹோட்டல் 'முதலாளி'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுவையில் தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் மாமியார்-மருமகள் ஒன்றாக சாப்பிட்டால் 50% கட்டணம் இலவசம், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் 100% இலவசம் என்ற அறிவிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
புதுவை நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்று படகுத்துறை அருகே தொடங்கப்பட்டுள்ள ஹோட்டல் ஒன்றில் வித்தியாசமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், சாப்பிட வருபவர்கள் 100 திருக்குறளை ஒப்புவித்தால் அவர்களுக்கு பிரியாணி மற்றும் காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் உள்ளிட்ட 20 வகை அசைவ விருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாமியார் - மருமகள் ஒன்றாக வந்து சாப்பிட்டால் அவர்களுக்கு 50 சதவீத கட்டணம் இலவசம். அவர்கள் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டால் முற்றிலும் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பார்த்து இதுவரை 4 பேர் 100 திருக்குறளை ஒப்புவித்து பிரியாணி சாப்பிட்டு சென்றுள்ளனர். ஆனால் இதுவரை ஒரு மாமியார், மருமகள் கூட வரவில்லை.
எழுத்தாளர் ஞானபானுவின் மகனான ஹோட்டல் முதலாளி நிருபன், தந்தையின் தமிழார்வத்தால் தூண்டப்பட்டு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக கூறியுள்ளார். மேலும் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்துவதற்காக மாமியார் -மருமகள் திட்டம் அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.