‘அத நெனச்சு நைட் எல்லாம் சரியா தூங்கவேயில்ல’.. இந்திய வீரர் குறித்து கூறிய ராஸ் டெய்லர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 12, 2019 11:38 PM
பும்ராவின் பந்துவீச்சைக் குறித்து நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு நியூஸிலாந்து செல்கிறது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஸ் டெய்லர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து எதிர்கொள்கிறது.
இந்நிலையில் அரையிறுதியில் இந்திய அணியுடன் விளையாடியது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த ராஸ் டெய்லர், ‘அரையிறுதிப்போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது டெஸ்ட் போட்டியில் விளையாடும் உணர்வைக் கொடுத்தது. வில்லியம்சன் அவுட் ஆன பிறகு அதிக ரன்கள் எடுக்க வேண்டிய சவாலான பொறுப்பு எனக்கு இருந்தது. 260 ரன்கள் எடுத்தால், அது சவாலான இலக்காக இருக்கும் என்று வில்லியம்சன் என்னிடம் கூறினார். மேலும் ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவர வேண்டுமானால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுளை எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம்’ என தெரிவித்திருந்தார்.
மேலும் பும்ரா குறித்து பேசிய அவர், ‘டெத் ஓவர்களை வீசுவதில் உலகிலேயே தலைசிறந்தவர் பும்ரா. அவரை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கேள்விக்கு என்னிடம் தற்போதும் பதில் இல்லை. அரையிறுதியில் பும்ராவை எப்படி சமாளிக்க போகிறோம் என அதிகாலை 3 மணிக்கே எழுந்து யோசிக்க தொடங்கிவிட்டேன். நாங்கள் அவரின் ஓவரில் சரியாக ஆடவில்லை. சற்று தடுமாறினோம் என்பதை ஒத்துகொண்டுதான் ஆகவேண்டும்’ என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.