உடற்தகுதி விவகாரம்: டிராவிட்டை 'கோபப்படுத்திய' பும்ரா... திருப்பி அனுப்பியதற்கு 'காரணம்' இதுதான்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 21, 2019 08:30 PM

உடற்தகுதி தேர்வுக்காக வந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை, ராகுல் டிராவிட் திருப்பி அனுப்பிய விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Why NCA refused to Conduct fitness test on Bumrah? details here

உலகில் உள்ள பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் பந்து வீச்சாளரும், இந்திய அணியின் துருப்புச்சீட்டு என புகழப்படுபவருமான பும்ரா காயம் காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு பின் நடைபெற்ற எந்தவொரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.

பொதுவாக காயமடைந்த வீரர்கள் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது பொதுவான ஒரு விதிமுறை. ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சரியான சிகிச்சை கிடைக்காது என கருதும் மூத்த வீரர்கள் சமீபகாலமாக தனிப்பட்ட முறைகளில் சிகிச்சை எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

பும்ராவும் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த் சிவஞானம் என்பவரிடம் பயிற்சி எடுத்து, அதுதொடர்பான வீடியோக்களையும் வெளியிட்டார். இந்திய அணிக்கான பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர் சிவஞானம். எனினும் டெல்லி அணிக்கு அவர் உடற்தகுதி நிபுணராக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக ஆடிவரும் பும்ரா தனிப்பட்ட முறையில் டெல்லி அணி பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்து வருகிறார்.

சிலநாட்களுக்கு முன் இந்திய அணியின் வீரர்களுடன் இணைந்து பும்ரா வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இதனையடுத்து பும்ரா முழு உடற்தகுதி பெற்று விட்டதாக இந்திய அணி தெரிவித்தது. வீரர்கள் காயமடைந்தால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி பெற்று விட்டதற்கான ஒப்புதலை பெற்று தான் அணிக்கு திரும்ப வேண்டும் என்பது பிசிசிஐ விதி.

இதனால் பும்ரா பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். ஆனால் அவரை பரிசோதிக்க ராகுல் டிராவிட் தலைமையிலான அகாடமி மறுப்பு தெரிவித்து விட்டது. பும்ரா வெளியில் பயிற்சி எடுத்ததால் அவரது உடல் தகுதிக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? என ராகுல் கருதுவதாக கூறப்படுகிறது. பும்ராவுக்கு சோதனை நடத்தும் பொருட்டு முன்னதாக இந்திய அணியின் பயிற்சியாளர் நிக் வெப்பை பெங்களூருக்கு  தேசிய அகாடமி வரச்சொல்லி இருந்ததாம். ஆனால் கடைசி நேரத்தில் நிக் வெப்பை வர வேண்டாம் என ராகுல் கூறிவிட்டாராம்.

இவை அனைத்துக்கும் காரணம் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மீது வீரர்களுக்கு இருக்கும் பயம்தான் என்று கூறப்படுகிறது. எனினும் சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் விரைவில் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்வார் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, '' எனக்கு ராகுல்-பும்ரா விவகாரம் குறித்து எதுவும் தெரியாது. ஆனால் காயமடைந்த வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதி தேர்வை நிரூபித்து அதன் பின்னர் தான் இந்திய அணிக்குள் வரமுடியும் இதுதான் வழிமுறை.பும்ரா கேட்டிருந்தால் தேசிய கிரிக்கெட் அகாடமி (என்சிஏ) உடல்தகுதி நிபுணர்களை அனுப்பி இருப்போம்.

என்சிஏ அமைப்பின் கீழ் பும்ரா பயிற்சி எடுத்திருக்கலாம். என்சிஏ அமைப்பில் சிறந்த பயிற்சியாளர்களும், உடல்தகுதி நிபுணர்களும் இருக்கிறார்கள். டிராவிட் மீது எனக்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறது, மிகச்சிறந்த வீரர். அவரின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் சிறப்பாக இருக்கும். அவரின் தலைமையில் என்சிஏ சிறப்பாக உருவாகும்,'' என தெரிவித்து இருக்கிறார்.