ஐபிஎல் ஏலத்தை நிறுத்துங்க.. பேரம் பேச வீரர்கள் என்ன கால்நடைகளா?" – சி.எஸ்.கே வீரர் கோரிக்கை
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் மெகா ஏலம் கிரிக்கெட் வீரர்களை ஆடு மாடுகளை போல் நடத்தப்படுகிறோம் என்று சிஎஸ்கே வீரர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கு ஏலம் மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த முறை ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் மொத்தமாக 590 வீரர்கள் கலந்துகொண்டனர். அதில், 204 பேர் மட்டுமே விற்கப்பட்டனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்கப்படாதது, இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷன்னா வாங்கப்பட்டது போன்றவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதே சமயம் சிஎஸ்கே அணியால் ரூ.2 கோடிக்கு ராபின் உத்தப்பா வாங்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளுடன் மும்பை, சென்னை உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இந்த 2022 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரராக இந்தியாவின் இளம் வீரர் இஷான் கிசான் 15.5 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அவருடன் தீபக் சஹர் 14 கோடி, ஷ்ரேயஸ் ஐயர் 12.25 கோடி என பல இந்திய வீரர்கள் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டார்கள்.
அவர்களைப் போலவே லியம் லிவிங்ஸ்டன், நிக்கோலஸ் பூரான், டேவிட் வார்னர் போன்ற பல வெளிநாட்டு நட்சத்திர வீரர்களும் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போனார்கள். இந்த ஏலத்தில் ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் போன்ற ஒரு சில முக்கியமான நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஏலம் போகவில்லை. ஐபிஎல் போட்டிகளை பொருத்தவரை கடந்த வருடம் மிகப் பெரிய தொகைக்கு ஏலம் போனவர்கள் இந்த வருடம் குறைந்த தொகைக்கு ஏலம் போவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில், "ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கால்நடைகளைப் போல நடத்தப்படுவதாக இந்திய வீரர் ராபின் உத்தப்பா" வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "சிஎஸ்கே போன்ற ஒரு அணிக்காக விளையாடுவது நான் விரும்பிய ஒன்று. அது என்னுடைய, எனது குடும்பத்துடைய, என் மகனுடைய பிரார்த்தனையாக இருந்தது. இதை நான் சிறப்பாக கருதுகிறேன். நான் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பு உணர்வும், மரியாதை உணர்வும் உள்ள இடத்தில், என்னால் எதையும் செய்ய முடியும் என்ற உணர்வைத் தரும் ஒரு ஆதரவு சிஎஸ்கேயில் இருக்கிறது. ஐபிஎல் ஏலம் எப்போதோ எழுதிய பரீட்சையின் முடிவுகளுக்காக காத்திருப்பது போன்று இருக்கிறது. உண்மையை சொல்ல போனால், நாங்கள் கால்நடைகளை போல நடத்தப்படுவதாக உணர்கிறோம். இது மிகவும் மகிழ்ச்சிகரமான உணர்வு அல்ல.
விற்கப்படாத வீரர்கள் வாழ்வில் என்ன சந்திக்கிறார்கள் என்பது பற்றி அனைவருக்கும் தெரியாது. அது இனிமையானது அல்ல. நீண்ட நாள் ஆடிவிட்டு பிறகு எடுக்கப்படாமல் போகும் நிலை என்ன என்பதை அறிவேன், அந்த மாதிரி ஒதுக்கப்பட்ட வீரர்களை நோக்கித்தான் என் சிந்தனை செல்கிறது. இது நம்மை தோற்கடிக்கச் செய்யும். ஒரு கிரிக்கெட் வீரராக நம் மதிப்பு என்பது கடைசியில் ஒருவர் நமக்கு எவ்வளவு தொகை தரத் தயாராக இருக்கிறார் என்பதைப் பொறுத்ததாக மாறுவது நல்லதல்ல. பைத்தியக்காரத்தனத்துக்கு ஒழுங்குமுறை ஏதுவும் இல்லை" எனக் கூறியுள்ளார்.