எல்ஐசியில் கேட்பாறின்றி கிடக்கும் ரூ.21,500 கோடி.. எங்கே போகப்போகிறது தெரியுமா?.. யாருக்கு இந்த பணம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎல்ஐசி காப்பீடு நிறுவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, ரூ.21 ஆயிரத்து 539 கோடி கேட்பாரின்றி கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 2000க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு, 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது. உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்குகள் விரைவில் வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1ம் தேதி நடந்த பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார்.
ரூ.78,000 கோடி நிதி திரட்டும் மத்திய அரசு
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் கூட எல்ஐசி பங்கு விற்பனை விரைவில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பொதுப் பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மார்ச் 31-ம் தேதிக்குள் ஐபிஓ மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஐசியில் 5% பங்குகளை விற்று ரூ.78,000 கோடி நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் 31.6 கோடி பங்குகள் விற்கப்படும் எனத் தெரிகிறது. இதில் 50% நிறுவன முதலீட் டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்பட இருப்பதாகவும், 5%தள்ளுபடி வழங்கப்பட இருப் பதாகவும் கூறப்படுகிறது.
கேட்பாறின்றி கிடக்கும் பணம்
இந்நிலையில், எல்ஐசி காப்பீடு நிறுவனத்தில் 2021, செப்டம்பர் மாதம் வரை, ரூ.21 ஆயிரத்து 539 கோடி கேட்பாறின்றி கிடப்பதாக தெரியவந்துள்ளது. எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் பங்குச்சந்தைஒழுங்கமைப்பான செபியிடம் பங்குவிற்பனைக்காக தாக்கல் செய்த வரைவு அறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எல்ஐசி நிறுவனத்தில் யாரும் உரிமை கோரப்படாமல் ரூ.18ஆயிரத்து 495 கோடியும், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் ரூ.16ஆயிரத்து 52 கோடியும் இருந்ததாகக் கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.13 ஆயிரத்து 843 கோடி இருந்தது எனத் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாலிசிதாரர்களால் உரிமை கோரப்படாமல் கோடிக்கணக்கில் சேர்ந்து வருகிறது.
பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
எல்ஐசியில் பாலிசி எடுத்து, அதை முறையாகக் கட்டாமல் இருப்பது, பாலிசி ப்ரீமியம் தொகையை செலுத்தாமல் அபாரதத்துடன் செலுத்த வேண்டும் என்பதால், செலுத்தாமல் இருப்பது, பாலிசிதொகை செலுத்தி அதை முடிக்கமுடியாமல் காலாவதியாக இருப்பது போன்று பல்வேறு வகைகளில் இந்த தொகை கேட்பாரின்றி கிடக்கிறது. எந்தவொரு பாலிசி நிறுவனமும், அதன் நிறுவனத்தில் ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக பாலிசிதாரர்களால் உரிமை கோராமல் இருந்தால் இதுகுறித்த விவரங்களை தெரிவிப்பது அவசியம். அதேபோன்று பாலிசிதாரர்கள் தங்களது பெயரில் தொகை இருக்கின்றதா என்பதை தெரிந்துகொள்ள உரிமை உண்டு. இதற்கான வசதி இணையதளத்தில் தரப்பட வேண்டும்.
யாருக்கு இந்த பணம்
10 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிசிதாரர்களால் கேட்பாறின்றி பணம் இருந்தால், அந்தத் தொகை முதியோர் நலன் நிதிக்காக மாற்றப்படும். இதற்காக ஐஆர்டிஏ தனியாக விதிமுறை உருவாக்கியுள்ளது. எனவே, கேட்பாரின்றி கிடக்கும் இந்த ரூ.21,500 கோடியில் 10ஆண்டுகள் நிறைந்த பாலிசிதாரர்களின் தொகை முதியோர் நலன் நிதிக்கு மாற்றப்படுகிறது.