"பாப் டு பிளஸ்ஸிஸ் நமக்கு வேணும்.." 'CSK' கிட்ட இருந்து பிரிக்க, 'RCB' போட்ட மாஸ்டர் பிளான்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பாக நடந்து முடிந்திருந்த நிலையில், பத்து அணிகளும் ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கியுள்ளது.

இரண்டு நாள் மெகா ஏலத்தில், சில சிறந்த வீரர்களை அணியில் எடுக்க, கடும் போட்டிகளும் ஏற்பட்டிருந்தது. இந்த போட்டியின் முடிவு, ஏதாவது ஒரு அணிக்கு தான் சாதகமாக அமைந்திருக்கும்.
அந்த வகையில், கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் பாப் டு பிளஸ்ஸிஸை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
ஆச்சரியம்
பிராவோ, உத்தப்பா உள்ளிட்ட முன்னாள் சிஎஸ்கே வீரர்களை, மீண்டும் ஏலத்தில் எடுத்த சென்னை அணி, கடந்த முறை கோப்பையைக் கைப்பற்ற காரணமாக இருந்த டு பிளஸ்ஸிஸை ஏலத்தில் எடுக்காமல் விட்டு விட்டது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் மத்தியில் இந்த முடிவு, கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ரசிகர்கள் கருத்து
ஆரம்பத்தில், டு பிளஸ்ஸிஸை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்த நிலையில், அவர் மீதான தொகை ஏற ஏற, பின் வாங்கிக் கொண்டது. இதன் காரணமாக, இறுதியில், பெங்களூர் அணி அவரை வாங்கிக் கொண்டது. இன்னும் கொஞ்சம் தொகை வரை சிஎஸ்கே அணி முயற்சி செய்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் பின்பு கருத்து தெரிவித்திருந்தனர்.
பாப் டு பிளஸ்ஸிஸ்
இந்நிலையில், டு பிளஸ்ஸிஸை அணியில் எப்படி எடுத்தார்கள் என்பது பற்றி, ஏலத்திற்கு முன்பாக திட்டம் போடும் 'Mock Auction' வீடியோ ஒன்றை, பெங்களூர் அணி தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசும் ஆர்சிபி அணியின் இயக்குனர் மைக் ஹெசன், 'நம்மிடம் இருக்கும் வீரர்களின் அடிப்படையில், ஏலத்தில் நமது சிறந்த தேர்வாக டு பிளஸ்ஸிஸ் இருப்பார். தென்னாப்பிரிக்க அணிக்காக சிறந்த கேப்டனாக அவர் வலம் வந்துள்ளார். அதே போல, ஐபிஎல் தொடரிலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டியை வென்று கொடுத்துள்ளார்.
ஆர்சிபி போட்ட திட்டம்
ஒரு தலைவரிடம் நீங்கள் விரும்பும் பல பண்புகள், டு பிளஸ்ஸிடம் உள்ளது. சிஎஸ்கே அணி நிச்சயம் டு பிளஸ்ஸிஸை மீண்டும் அணியில் இணைக்க முயற்சி செய்யும். அப்படி ஒரு சூழ்நிலையில், நாம் அவரை எடுக்க வேண்டும் என்றால், அதற்காக பட்ஜெட்டினை ஒதுக்க வேண்டும். அவரை எடுக்கும் அணியுடன் இணைந்து நாம் செல்ல வேண்டும். நிச்சயம் சிஎஸ்கே அதற்கான வேலைகளில் ஈடுபடும்.
பக்காவா பிளான் பண்ணனும்
டு ப்ளஸ்ஸிஸுக்காக நாம் ஏலத்தில் முயற்சி மேற்கொள்வோம் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவருடன், இலங்கை வீரர் ஹசரங்கா ஆகிய இரண்டு வெளிநாட்டு வீரர்களை முதல் நாளில் நாம் எடுக்க வேண்டியது தான் முக்கியமான வேலை. ஆனால், அதனை நாம் அடைவதற்கு, எவ்வாறு பயணம் செய்ய வேண்டியது என்பது தான் மிக மிக முக்கியம். முதல் தினத்தில் முன்னுரிமை காட்ட வேண்டிய வீரர்கள் பாப் டு பிளஸ்ஸிஸ் மற்றும் ஹசரங்கா தான்' என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
வைரல் வீடியோ
'Mock Auction' வீடியோவாக இருந்தாலும், டு ப்ளஸ்ஸிஸை ஏலத்தில் எடுக்க வேண்டும் என பெங்களூர் அணி, முன்னதாக நிச்சயம் திட்டம் போட்டிருக்கும் என்றே ரசிகர்கள் கருதி வருகின்றனர். கேப்டன் இல்லாததால், சிஎஸ்கே அணியிடம் இருந்து அவரை எப்படி தட்டித் தூக்கலாம் என்பதையும் நிச்சயம் யோசித்திருப்பார்கள் என்றும் உறுதியுடன் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
