சிஎஸ்கேவுக்கு காத்திருக்கும் தலைவலி?.. தோனி என்ன செய்ய போறாரு?.. குழப்பத்தில் ரசிகர்கள்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக இலங்கை அணியுடன், டெஸ்ட் மற்றும் டி 20 தொடரில், இந்திய அணி மோதவுள்ளது.

முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் என இரண்டையும், இந்திய அணி வென்று சாதனை புரிந்திருந்தது.
தொடர்ந்து, அதே ஃபார்முடன், இலங்கை அணிக்கு எதிரான தொடர்களையும் வென்று காட்டும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
காயத்தால் விலகல்
இதனிடையே, இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவர் காயம் காரணமாக இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில், தீபக் சாஹர் களமிறங்கியிருந்தார். இரண்டு ஓவர்கள் வீசி முடிப்பதற்குள், வெஸ்ட் இண்டீஸ் அணியின் இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்து சிறப்பாக ஆரம்பித்திருந்தார்.
விலகிய தீபக் சாஹர்
ஆனால், இரண்டாம் ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்த போது, தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டு, பந்து வீச முடியாத நிலை உருவானது. உடனடியாக, அவரை மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு சென்றனர். சாதாரண காரணம் உருவாகியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், தசை நார்கள் கிழிந்ததாக கூறப்படுகிறது.
சிஎஸ்கேவுக்கு சிக்கல்
இதன் காரணமாக, இலங்கை தொடரில் இருந்து விலகியுள்ள தீபக் சாஹர், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய ஒன்றரை மாத காலங்களுக்கு மேல் வரை ஆகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் அணியான சிஎஸ்கேவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
14 கோடி ரூபாய்க்கு ஏலம்
மார்ச் மாத இறுதியில், ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் வேளையில், தீபக் சாஹர் காயத்தில் இருந்து குணமடைய, காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால், ஐபிஎல் தொடரின் ஆரம்ப போட்டிகளில், அவர் பங்கேற்காமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில், சிஎஸ்கே அணி, தீபக் சாஹரை 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
முக்கிய பவுலர்
ஒரு வீரருக்காக, சென்னை அணி செலவு செய்த அதிக தொகை இது தான். பவுலரான தீபக் சாஹர், தற்போது பேட்ஸ்மேன் ஆகவும் உருவாகி வரும் நிலையில், சிஎஸ்கே அணி அவரை மீண்டும் தட்டித் தூக்கியது. கடந்த சீசன்களிலும், சென்னை அணிக்காக ஆரம்பத்திலேயே விக்கெட் எடுத்து, வெற்றிக்கும் அவர் வழி செய்துள்ளார்.
தோனியின் முடிவு?
அப்படிப்பட்ட சூழ்நிலையில், தீபக் சாஹர் ஆரம்ப ஐபிஎல் போட்டிகளை தவற விடுவதாக கூறப்படும் தகவல், நிச்சயம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அடியாகவே இருக்கும் என கருதப்படுகிறது. ஒரு வேளை அவரது காயம் சரியாகி, மிக விரைவில் மீண்டு வரலாம்.
அப்படி நடக்காமல், ஆரம்ப போட்டிகளை அவர் தவற விடும் பட்சத்தில், ஆரம்ப ஓவர்களில் பந்தினை ஸ்விங் செய்து, தீபக் சாஹரை போல விக்கெட் எடுக்கக் கூடிய ஒரு பந்து வீச்சாளரை, சில போட்டிகளுக்காக தயார் செய்யும் வேலையும் தோனிக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
