"தோல்வியைத் தழுவிய இந்திய ’ஒலிம்பிக்’ வீராங்கனை’.. ’பயிற்சியாளர் விவகாரத்தில் எழுந்த சர்ச்சை’.. ’உச்சகட்ட கோபத்தில் தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தொடக்கத்தில் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார். பிரிட்டனுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இவர் 4-0 என்ற புள்ளி கணக்கில் வென்றார். பின்னர் மீண்டும் குழு போட்டியில் உக்ரைனிடம் 4-3 என்ற கணக்கில் வென்றார். ஆனால், கடைசியாக நடந்த மூன்றாவது குழு போட்டியில் ஆஸ்திரியாவின் சோபியாவிடம் மணிகா பத்ரா தோல்வி அடைந்து ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.
மணிகாவின் இந்த தோல்வி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஒலிம்பிக் தொடரில் இந்திய டேபிள் டென்னிஸ் குழுவுடன் சவுமியாதீப் ராய் டோக்கியோ சென்று இருந்தார். வீரர், வீராங்கனைகள் பர்சனல் கோச் தவிர்த்து மொத்தமாக எல்லோருக்கும் பயிற்சி கொடுப்பதற்காக சவுமியாதீப் ராய் தேர்வு செய்யப்பட்டார். இவர் 2006 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர். டென்னிஸ் கமிட்டியில் பயிற்சியாளராக இருக்கிறார்.
இந்திய விதிப்படி சவுமியாதீப் ராய் மட்டுமே டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு போட்டி நடக்கும் களத்தில் ஆலோசனை வழங்க முடியும். வீரர், வீராங்கனைகளின் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் போட்டி நடக்கும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த நிலையில், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா தனது தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயை பரன்ஜாபாயை போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அப்போது, "அவரிடம்தான் நான் பயிற்சி பெற்றேன். இதுவே எனக்கு உதவியாக இருக்கும்" என்று மணிகா பத்ரா அனுமதி கோரி இருக்கிறார். ஆனால், மணிகா பத்ராவின் தனி பயிற்சியாளரை இந்திய ஒலிம்பிக் கமிட்டி, போட்டி நடக்கும் களத்திற்குள் அனுமதிக்கவில்லை. வெளியே பயிற்சி கொடுக்க மட்டுமே அனுமதித்தது. தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் ஆலோசனை பெறுமாறு மணிகாவிற்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், மணிகா களத்தில் தேசிய பயிற்சியாளர் சவுமியாதீப் ராயிடம் எந்த ஆலோசனையும் பெறவில்லை. வெளியே தனிப்பட்ட பயிற்சியாளர் சன்மாயிடம் பெற்ற ஆலோசனைகளை வைத்தே மணிகா போட்டியில் ஆடியுள்ளார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இவரின் செயல்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய டென்னிஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய டேபிள் டென்னிஸ் கமிட்டி, "மணிகா செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் செய்தது ஒழுங்கீனமான செயல். மற்ற வீரர்கள் எல்லோரும் தேசிய பயிற்சியாளரை அணுகிய போது, மணிகா மட்டும் தனியாக செயல்பட்டது தவறானது. அவர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்துள்ளது.