மின் கட்டண பில் (EB BILL) ஷாக் அடிக்க வைக்கிறதா?.. அதிக கட்டணத்தை சரி செய்யும் வழி 'இது' தான்!.. அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அதிக மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அதனை பொதுமக்கள் எப்படி சரிசெய்து கொள்ளலாம் என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு மாதங்களாக குடியிருப்புகளுக்கு சென்று மின் கட்டணம் அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு மின் கட்டண அடிப்படையில் வசூல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று மின் அளவீடுகளை எடுக்கின்றனர். இந்நிலையில், மின் கட்டண பில், பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
அதாவது மின் கட்டணம், இரு மடங்கு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகமாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்னகம் சேவை மையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரையில் 14 லட்சம் மின் நுகர்வோர்கள், அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட மின்கட்டணத்தை திருத்தி அதன் பின்னர் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கருதும் மின் நுகர்வோர் 9498794987 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் மின் வாரிய அதிகாரிகள் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து கட்டண திருத்தம் செய்ய வேண்டியிருந்தால் செய்வார்கள் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.