'இந்த டீம் கண்டிப்பா டி20 உலகக் கோப்பை ஜெயிக்காது!.. அதுக்கு ஒரே காரணம் 'இவர்' தான்!.. அடித்து சொல்லும் ஆகாஷ் சோப்ரா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி20 உலகக்கோப்பையை வெல்ல பலம் வாய்ந்த ஒரு அணிக்கு கஷ்டம் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் மிகவும் பலம் வாய்ந்த அணியான தென்னாப்பிரிக்கா, மீண்டும் தனது அதிரடி மன்னன் டிவில்லியர்ஸை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி நட்சத்திர வீரரான ஏ.பி. டிவில்லியர்ஸ். இந்தியாவில் மட்டுமின்றி உலகமெங்கும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இது உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பிறகு 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க அணிக்காக மீண்டும் விளையாட விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கை அந்நாட்டு வாரியத்தால் நிராகரிக்கப்பட்டது. எனினும், அடுத்ததாக வரவிருக்கும் டி20 உலகக்கோப்பையில் ஏ.பி. டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடுவாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால், டிவில்லியர்ஸ் ரசிகர்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. அவர் தனது ஓய்வு முடிவிலேயே இருப்பதாகவும், மீண்டும் விளையாட விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டிவில்லியர்ஸ் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பை வெல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டிவில்லியர்ஸ் இருந்தால் அந்த அணியின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக இருக்கும். ஆனால், அவர் இல்லையென்றால் அவரை போன்ற சிறந்த வீரரை அந்த அணியால் பெற முடியாது. தென்னாப்பிரிக்காவில் இப்போதும் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால், அவர்களால் உலகக்கோப்பையை வெல்ல முடியுமா என்று பார்த்தால், நான் முடியாது என்றுதான் கூறுவேன்.
டிவில்லியர்ஸ் இருக்கும் போதும் கூட அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. எனினும், ஐசிசி தொடர்களில் அவர் இருக்கும் போது தென்னாப்பிரிக்கா சிறப்பாக ஆடியது. ஆனால், இந்த முறை அவர்களின் அணி சிறப்பாக இல்லை. கடினமான நேரங்களில் அவர்கள் திணறுவார்கள். அவர்களுக்கு இக்கட்டான சூழல்களை கையாள தெரியவில்லை என்பதே உண்மை. எனவே, டி20 உலகக்கோப்பை வெல்வது கடினம் எனக்கூறியுள்ளார்.