'இனி அவர யாராலும் தடுத்து நிறுத்த முடியாது'!.. கோலி மீது எழும் 'அந்த' விமர்சனத்துக்கு... முன்னாள் பாகிஸ்தான் வீரர் பதிலடி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி மீது தொடர்ந்து எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பதிலடி கொடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளார். தற்போதைய கிரிக்கெட் உலகில் சர்வதேச போட்டிகளில் 70 சதங்கள் அடித்த ஒரே வீரராக விராட் கோலி உள்ளார். ஆனால் அவருக்கு சதம் அடிப்பதில் தான் தற்போது பிரச்னையே எழுந்துள்ளது. ஒரு காலத்தில் தொடர்ந்து சதங்களாக விளாசி வந்த விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
அவர் கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார். அதன் பின்னர் 3 மாதங்கள் கழித்து டெஸ்ட் சதம் ஒன்றை விளாசினார். அப்போது இருந்து இன்று வரை அவரால் ஒரு சதத்தை கூட அடிக்க முடியவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், விராட் கோலி பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். இந்த வயதில் அவர் 70 சதங்களை அடிப்பார் என யார் எதிர்பார்த்தார்கள். கோலியை போன்று இன்று கிரிக்கெட்டில் எந்த வீரர் முழு ஃபிட்டாகவும், முழு ஃபார்முடனும் உள்ளனர். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும், இலக்கை துரத்தும் போது கோலியின் சராசரி ரன் ரேட் 50 ஆக உள்ளது. அவரை யாரால் இனி தடுத்து நிறுத்த முடியும். கோலியால் அடுத்த போட்டியே அல்லது அடுத்த தொடரிலே கூட சதம் அடிக்க முடியும்.
அவர் சதம் அடித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இருக்கலாம். ஆனால், அவரின் ரன்களை பார்க்கவேண்டும். அவர் சதம் அடிக்கவில்லை என்றால் அவர் ரன்களே எடுப்பதில்லை என நினைத்துவிடுகிறார்கள். அவருக்கு சதமடிக்க கூடிய அத்தனை உடற்தகுதிகளும் உள்ளது. ஆனால், அதற்கான நேரம் இன்னும் கூடி வரவில்லை என சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக ஜூன் 2ம் தேதி முதல் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஜூன் 18ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. அதன் பின்னர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. எனவே, இந்த தொடரில் விராட் கோலி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
