'அந்த பையன் பெரிய லெவல்ல வருவாரு... தயவு செஞ்சு வாய்ப்பு கொடுங்க'!.. இளம் வீரருக்காக... கோலியிடம் கோரிக்கை வைத்த லக்ஷ்மண்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சீனியர் பவுலர்கள் 3 பேர் இருந்தாலும், இளம் வீரர் ஒருவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்திய அணி ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது. இதற்கான பணிகளில் இந்திய அணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் முன்னாள் வீரர் புது யோசனை வழங்கியுள்ளார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் வரும் ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பிறகு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது.
இங்கிலாந்து களம் வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்று. தொடக்கம் முதலே பிட்ச்-ல் நல்ல வேகமும், சுழலும் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் பவுலிங் படையை இரு அணிகளும் தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியில் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா, பும்ரா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் உள்ளனர். இவர்களை பயன்படுத்தவே அதிகளவில் வாய்ப்புள்ளது. இந்நிலையில், அவர்களை தவிர்த்து இளம் வீரர் முகமது சிராஜுக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், முகமது சிராஜ் மட்டும் அடுத்த சில வருடங்கள் கடுமையாக உழைத்தால், சர்வதேச அளவில் மிகப்பெரும் பவுலராக பெயர் எடுக்க வாய்ப்புள்ளது. அதற்கான திறமைகளும், தகுதிகளும் அவரிடம் உள்ளது. கடந்த சில மாதங்களாக அவரின் ஆட்டம் பெரியளவில் முன்னேறியுள்ளது. எனவே, இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். தற்போதைய இந்திய அணியில் அதிகப்படியான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
எனினும், விராட் கோலி இளம் வீரர் முகமது சிராஜுக்கு வாய்ப்பு கொடுத்தால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார். கடைசியாக அவரின் பவுலிங்கை ஆஸ்திரேலிய தொடரில் பார்த்தோம். அதில் முக்கிய பங்காற்றினார். எனவே, அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் மிகப்பெரும் வீரராக வருவார் எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
