'ஒவ்வொரு நொடியும்... MAN VS WILD மாதிரி இருந்துச்சு'!.. பயோ பபுளை கொரோனா உடைத்தது எப்படி?.. எல்.பாலாஜியின் திக் திக் அனுபவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி, பரபரப்பான தனது கொரோனா அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2021 ஐபிஎல் தொடரில், வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மே 4ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தான், பாதிக்கப்பட்ட வீரர்கள் ஒவ்வொருவாராக குணமடைந்து வருகின்றனர்.
முதலில் கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கும், சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதியானது. அதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி மற்றும் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு கொரோனா உறுதியானது. எனினும், அவர்கள் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டனர். இந்நிலையில் தனது கொரோனா அனுபவத்தை லட்சுமபதி பாலாஜி பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மே 2ம் தேதியன்று எனது உடல்நிலையில் மாற்றத்தை உணர்ந்தேன். உடல் வலி, மூக்கு அடைப்பு போன்றவை இருந்தது. இதனையடுத்து அன்று மதியமே செய்த பரிசோதனை செய்யப்பட்டு மறுநாள் காலை கொரோனா உறுதியானது. எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பயோ பபுள் விதிகளை எதையும் மீறவில்லை. எனினும், எனக்கு கொரோனா உறுதியானது. உடனடியாக நான் ஹோட்டலில் தனி இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வருவதென்பது, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மேன் vs வைல்ட் தொடர் போன்று இருந்தது.
என்னால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. ஏனெனில், வெளியில் மக்கள் நாள்தோறும் உயிரிழப்பதை கண்ணால் பார்த்து வருகிறேன். அந்த நொடியில் இருந்து நான் சக வீரர்களை பற்றி கவலை பட தொடங்கிவிட்டேன். அதற்கு காரணம், ராபின் உத்தப்பா, புஜாரா, தீபக் சாஹர் ஆகியோர் எனது அருகிலே தான் இருந்தனர்.
அது ஒரு வாழ்வா சாவா போராட்டம் போன்று இருந்தது. நாட்டில் பல்வேறு மக்கள் தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டாலும், சிலரால் உயிர்பிழைக்க முடியவில்லை. எனது வாழ்வில் நான் பல சவால்களை எதிர்கொண்டுள்ளேன். ஆனால், இது சற்று வித்தியாசமாக இருந்தது எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
