'சிஎஸ்கே நிர்வாகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை'!.. 'தான் யார் என்று நிரூபித்த ருத்துராஜ்'!.. தோனி 'கணக்கு' தப்பாகுமா!.. ஒரே போட்டியில் இப்படி ஒரு கம்பேக் எப்படி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடும் விமர்சனங்களுக்கு உள்ளான சிஎஸ்கே தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடியுள்ளார்.
சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணியின் தொடக்க வீரர்களின் அதிரடியால் அந்த அணி வலுவான நிலையில் உள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியது.
குறிப்பாக, தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் மீண்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடிக்கும் முதல் அரை சதம் இதுவாகும்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய டுப்ளசிஸும் அதிரடி காட்டினார். இதனால் சென்னை அணி பவர் ப்ளேவில் 54 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய கெயிக்வாட் 64 ரன்கள் அடித்திருந்த போது, பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். 42 பந்துகளை சந்தித்த அவர் 64 ரன்கள் அடித்தார். இதில் 4 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இன்றைய போட்டியில் ருத்ராஜ் கெயிக்வாட்டை அணியில் சேர்க்கவே கூடாது என ரசிகர்களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். ஏனெனில், இந்த சீசனில் இதற்கு முன்னர் ஆடிய 3 போட்டிகளிலும் ருத்ராஜ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 3 போட்டிகளில் 5, 5, 10 என்ற ரன்களே எடுத்திருந்தார். இதனால் சென்னை அணியின் ஓப்பனிங் திணறியது.
ஆனால், அவர் மீது சென்னை அணி நிர்வாகமும், தோனியும் கடந்த ஆண்டைப் போலவே நம்பிக்கை வைத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. இதுகுறித்து பேசியிருந்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளம்மிங், கடந்த ஆண்டு கெயிக்வாட் சிறப்பாக ஆடியதன் காரணமாக இந்த ஆண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்றும், மாற்றம் ஏதும் இருக்காது எனவும் தெரிவித்தார். அவர்களின் நம்பிக்கையை கெயிக்வாட் தற்போது காப்பாற்றியுள்ளதோடு, ரசிகர்களின் மனங்களையும் வென்றுள்ளார்.