'ஏன் அண்ணே... இந்த சீசன் தேறுமா'?.. 'ஒரு முறை தப்பு செஞ்சா பரவால்ல!.. திரும்ப திரும்ப... அய்யோ... செம்ம கடுப்பாகுது'!.. ரோகித் புலம்பல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 137 ரன்கள் அடித்தது.
அதிகபட்சமாக ரோகித் சர்மா 44 ரன்களும், இஷான் கிஷன் 26 ரன்களையும் அடித்தனர். டெல்லி அணி சார்பாக அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். அதன் பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ஷிகர் தவான் 45 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில், போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, "நல்ல துவக்கம் அமைந்தும் நாங்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்ய தவறிவிட்டோம். இந்த தவறை நாங்கள் மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம்.
இதுபோன்று போட்டிகளில் கிடைக்கும் தொடக்கத்தை தவறவிடுவது போட்டியில் ஏற்படும் தோல்விக்கு காரணமாக அமைகிறது. இந்த போட்டியிலிருந்து சில பாடங்களை எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதே வகையில் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். இந்த மைதானத்தின் தன்மையை அறிந்து அவர்கள் சரியான இடத்தில் சரியான வேகத்தில் பந்து வீசியதால் எங்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், இந்த போட்டியில் டியூ வரும் என்பதை நாங்கள் முதலிலேயே கணித்து இருந்தோம். அதுவே எங்களது பந்து வீச்சுக்கு பாதகமாகவும் அமைந்து. டியூ இருந்ததால் பந்தினை கிரிப் செய்து வீச முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாங்கள் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.