கோலியின் 100 ஆவது டெஸ்ட்… பிசிசிஐ எடுத்த சூப்பர் முடிவு- குஷியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்ற மைல்கல் சாதனையை படைக்கப்போகிறார்.
கோலியின் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி:
கிரிக்கெட்டின் ஆதி வடிவமான டெஸ்ட்டில் 100 போட்டிகள் விளையாடுவது என்பது எந்தவொரு வீரருக்கும் மிகப்பெரிய வாழ்நாள் கனவாகவே இருக்கும். சமீபகாலமாக டி 20 போட்டிகளின் வரவால் டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடப் படுவதில்லை. அதனால் பெருவாரியான வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி. உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதலை இப்போது இந்தியா கொண்டிருப்பதற்கு கோலியும் ஒரு முக்கியமானக் காரணம். அவர் தலைமையில் தொடர்ந்து 6 ஆண்டுகள் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தது அவரின் சாதனைகளில் ஒன்றாகும்.
கோலியின் 100 ஆவது டெஸ்ட்:
இந்நிலையில் கோலி இப்பொழுது டெஸ் கிரிக்கெட்டில் 100 டெஸ்ட்கள் விளையாடி சாதனை படைக்க உள்ளார். இப்போது வரை 99 டெஸ்ட்கள் விளையாடி உள்ளார். மார்ச் 4 ஆம் தேதி மொஹாலியில் நடக்கும் போட்டி அவரின் 100 ஆவது டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது. அதையடுத்து அந்த போட்டியை சிறப்பான ஒன்றாக மாற்ற 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க பஞ்சாப் கிரிக்கெட் அசோஷியேசன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவும் உறுதி செய்துள்ளார். பிசிசிஐ யின் இந்த முடிவால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கோலியின் டெஸ்ட் சாதனை:
இந்திய டெஸ்ட் அணிக்கு 2014 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கிவந்த கோலி இந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடருக்குப் பின்னர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 7962 ரன்கள் சேர்த்துள்ளார். அதில் 27 சதங்களும் 28 அரை சதங்களும் அடக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருக்கும் கோலி 100 ஆவது போட்டியில் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் தனது 71 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து சாதனைப் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.