பொது வெளியில் போட்டு உடைத்த 'சஹா'.. பிசிசிஐ எடுக்க போகும் நடவடிக்கை?.. பரபரப்பை ஏற்படுத்தும் 'பின்னணி'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து கொண்டிருக்கும் அதே வேளையில், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது சஹாவின் விவகாரம் தான்.
37 வயதான விருத்திமான் சஹா, இந்திய அணியின் சீனியர் விக்கெட் கீப்பர் ஆவார். டெஸ்ட் அணியில் இவர் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார். ஆனால், இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், இவரது பெயர் இடம்பெறவில்லை.
இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் வந்த பிறகு, சஹாவுக்கு அதிக அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
வேதனை அடைந்த சஹா
அது மட்டுமில்லாமல், இலங்கை டெஸ்ட் தொடரிலும் சஹாவுக்கு பதிலாக, இளம் விக்கெட் கீப்பர் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திடீரென சீனியர் விக்கெட் கீப்பரான சஹா, இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டிருந்தது, அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி மனம் திறந்த சஹா, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய போது, பிசிசிஐ தலைவர் கங்குலி தன்னை பாராட்டியதாகவும், தொடர்ந்து டெஸ்ட் அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தன்னிடம் தெரிவித்ததாகவும் சஹா குறிப்பிட்டிருந்தார்.
இந்திய அணியில் சர்ச்சை
அதே போல, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், உனக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும், அதனால் தன்னை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும், சஹா குறிப்பிட்டிருந்தார். பிசிசிஐ தலைவர் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் என இரண்டு பேர் தன்னிடம் தெரிவித்த மாறுபட்ட கருத்தினை சஹா பொது வெளியில் கூறியதால், கடும் சர்ச்சைகள் உருவானது.
மிரட்டிய பத்திரிகையாளர்
தொடர்ந்து, இது பற்றி மனம் திறந்த டிராவிட், ஒரு வீரர் மனமுடைய கூடாது என்பதற்காக, அவரிடம் முன்னரே அனைத்தையும் பகிர்ந்து, மனதளவில் அவர் தயாராக இருக்க வேண்டி தான் அப்படி தெரிவித்தேன் என விளக்கம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் ஒருவர் தன்னை மிரட்டியதாக சஹா வெளியிட்டிருந்த ஸ்க்ரீன் ஷாட்டும் அதிகம் வைரலாக பரவ ஆரம்பித்தது.
சஹா மீது நடவடிக்கை?
இது பற்றியும், பல கிரிக்கெட் பிரபலங்கள் கருத்து வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், சஹாவிடம் பிசிசிஐ சில நடவடிக்கை மேற்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. Group B கான்ட்ரக்ட்டில் உள்ள சஹா, அணி நிர்வாகம் மற்றும் அணிக்குள் நடக்கும் விஷயங்களை பேசுவது என்பது, விதியை மீறும் செயல்களாகும்.
விதியை மீறிய சஹா
கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர் தனிப்பட்ட முறையில் தெரிவித்த கருத்தினை, சஹா பொது வெளியில் பேசியுள்ளதால், அவரிடம் இது பற்றி பிசிசிஐ விசாரணை மேற்கொள்ளும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. மேலும், சஹாவுக்கு பிசிசிஐ விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், பிசிசிஐ எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனதால் விரக்தியில் இருந்த சஹா, அணி நிர்வாகத்துக்குள் இருக்கும் கருத்துக்களை வெளிப்படையாக பேசியதால், பெரிய சிக்கல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.