கோலி வழங்கிய பரிசு.. வேண்டாம் என திருப்பி கொடுத்த சச்சின்.. வியப்பில் ஆழ்த்திய விராட்.. பின்னணி என்ன??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறும் நேரத்தில், விராட் கோலி கொடுத்த பரிசு ஒன்றை குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், எண்ணில் அடங்காத பல சாதனைகளை தன்னுடைய பேட்டிங் திறமையால் செய்து காட்டியுள்ளார்.
அவற்றுள் சில சாதனைகள் எல்லாம் முறியடிக்க வேண்டும் என்றால், இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அப்படிப்பட்ட கிரிக்கெட் உலகின் தலைச் சிறந்த ஜாம்பவான், தனது ஓய்வு முடிவினை அறிவித்து, கடைசி கிரிக்கெட் போட்டியை ஆடி, ஓய்வு பெற்ற போது, இந்தியா மட்டுமில்லாமல், அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் கண்ணீர் வடித்திருந்தனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர்
கடந்த 2013 ஆம் ஆண்டு, சச்சின் தனது ஓய்வினை அறிவித்திருந்தார். அந்த சமயத்தில், இந்திய அணியின் இளம் வீரராக இருந்த கோலி, தனக்கு அளித்த பரிசு ஒன்றைக் குறித்து, சச்சின் டெண்டுல்கர் தற்போது மனம் திறந்துள்ளார். 'இந்திய அணிக்காக, கடைசியாக ஒரு முறை கிரிக்கெட் போட்டி ஆடிவிட்டு, அதிக மன வேதனையுடன், ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு, என் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இருந்தேன். அப்போது, எனதருகில் வந்த கோலி, பரிசு ஒன்றை எனக்கு வழங்கினார்.
கோலியின் பரிசு
விராட் கோலிக்கு அவரது மறைந்த தந்தை கொடுத்த ஒரு புனித கயிறு தான் அது. அதனை, என்னிடம் விராட் கோலி கொடுத்தார். அதை வாங்கிய நான், சிறிது நேரம் என்னிடம் வைத்துக் கொண்டேன். ஆனால், கொஞ்ச நேரத்திற்கு பிறகு, அதனை மீண்டும் நான் கோலியிடமே கொடுத்து விட்டேன்.
உன்னுடனே இருக்க வேண்டும்
அதனைக் கொடுத்து விட்டு அவரிடம், "விலை மதிப்பில்லாத இந்த புனித கயிறு, உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன்னுடைய கடைசி மூச்சு வரை, இதனை நீ வைத்திருக்க வேண்டும்" எனக்கூறி விட்டு அதனை மீண்டும், கோலியிடம் கொடுத்து விட்டேன். அது மிகவும் நெகிழ்ச்சியான தருணமாகும். என்னுடைய நினைவில் எப்போதும் இருக்கும் ஒரு சம்பவம் ஆகும்' என சச்சின் டெண்டுல்கர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்து போன தந்தை கொடுத்து விட்டுச் சென்ற புனித கயிற்றினை, சச்சினுக்கு அளிக்க வேண்டும் என்ற கோலியின் முடிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.