'கோலி' விவகாரத்தில் 'பிசிசிஐ' எடுத்த முடிவு.. "அது எவ்ளோ ஸ்பெஷல்'ன்னு தெரியுமா??.." ஏமாற்றம் அடைந்த சுனில் கவாஸ்கர்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே டி 20 போட்டித் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக டெஸ்ட் தொடருக்கு வேண்டி, இரு அணிகளும் தயாராகி வருகிறது.
இலங்கைத் தொடருக்கு முன்பாக, ஒரு நாள் மற்றும் டி 20 என இரண்டிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்திருந்தது இந்திய அணி.
தொடர்ந்து, இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரின் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்தது.
முனைப்பு
இந்த மூன்று தொடர்களிலும் இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் கேப்டன் ரோஹித் ஷர்மா. புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா பதவியேற்றது முதல், இந்திய அணி வெற்றிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி வென்று அசத்தும் முனைப்பில் உள்ளது.
100 ஆவது டெஸ்ட்
இதன் முதல் டெஸ்ட் போட்டி, மொஹாலியில் வரும் 4 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இந்த டெஸ்ட் போட்டி, இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு மிக முக்கியமான டெஸ்ட் போட்டியாகும். ஏனென்றால், கோலி ஆடும் 100 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். 100 ஆவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும், 12 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெறவுள்ளார்.
பார்வையாளர்களுக்கு அனுமதி?
மேலும், இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால், முதல் டெஸ்ட்டில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கோலியின் நூறாவது டெஸ்ட் என்பதால், அவரை கவுரவிக்கும் வகையில், பார்வையாளர்கள் இருப்பார்கள் என்றும் பரவலாக கருத்து வெளியாகி வந்தது.
பிசிசிஐ விளக்கம்
ஆனால், மொஹாலி டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என பிசிசிஐ தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொஹாலியைச் சுற்றியுள்ள பகுதியில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் உருவாவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வேண்டி, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சுனில் கவாஸ்கர் கருத்து
கோலியின் 100 ஆவது டெஸ்ட் போட்டியை நேரில் காணலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அவரது ரசிகர்கள், கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், பிசிசிஐயின் முடிவு பற்றி சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
'எந்த போட்டியாக இருந்தாலும், அங்கு மக்கள் கூட்டம் இருக்க வேண்டும். சமீப காலமாக, இந்திய அணி பார்வையாளர்கள் இல்லாமல் ஆடி வருகிறது. நடிகராக இருந்தாலும், கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சுற்றி மக்கள் இருந்தால் தான் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.
ஏமாற்றம் அளிக்கிறது
அதிலும், 100 ஆவது டெஸ்ட் என்பது மிக ஸ்பெஷலான ஒன்று. ஆனால், பார்வையாளர்கள் வேண்டாம் என்ற பிசிசியின் முடிவு கடும் ஏமாற்றத்தை எனக்கு அளிக்கிறது. ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்திருக்கலாம். என்றாலும், மொஹாலி பகுதியில் கொரோனா பாதிப்பு உள்ளதால், மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்' என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மொஹாலி டெஸ்ட் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில், அடுத்து பெங்களூரில் வைத்து பகலிரவாக நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில், 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.