"நம்ம 'டீம்'க்கு என்ன தேவையோ, அத இந்த 'பையன்' தான் ஜெயிச்சு குடுக்கப் போறான்.. பாத்துட்டே இருங்க".. அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைத் தான், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது எதிர்நோக்கி காத்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக, இரு அணிகளும் இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள நிலையில், இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த இரு தொடர்களும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதால், அங்குள்ள பிட்ச் கண்டிஷன்கள், வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குண்டப்பா விஸ்வநாத் (Gundappa Viswanath), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது பற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய பவுலர்கள் VS நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் என்ற நிலையில் தான் போட்டி அமையும். இந்தியாவின் பந்து வீச்சு, தற்போது அதிக வலிமையுடன் விளங்குகிறது.
ஷமி, பும்ரா, சிராஜ் மற்றும் இஷாந்த் ஆகியோரை பாருங்கள். அவர்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இதில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இளம் வீரர் சிராஜ், அற்புதமாக பந்து வீசியிருந்தார். WTC இறுதிப் போட்டியிலும், கோலிக்கான பணியை சிராஜ் (Siraj) செய்து முடிப்பார் என நான் நம்புகிறேன். இந்தியா மற்றும் நியூசிலாந்து என இரு அணிகளும், நடுநிலையான ஒரு மைதானத்தில் மோதுகின்றது. இது ஒரு நல்ல போட்டியாக இருக்கும்.
நியூசிலாந்து அணி நல்ல பலத்துடன் இருக்கிறது. இதனால், அவர்களை இந்திய அணி எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில், இந்திய அணிக்கான நம்பிக்கையை அதிகரிக்கும்' என குண்டப்பா விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.