"'லைவ்'ல இருக்குறத மறந்து.. இப்படி 'டீம்' ரகசியத்த உளறி வெச்சுட்டீங்களே பாஸ்??.." கசிந்த 'கோலி' - 'ரவி சாஸ்திரி'யின் 'உரையாடல்'?!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், தற்போது எதிர்நோக்கி காத்திருப்பது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியைத் தான்.
இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டி தொடரில் நியூசிலாந்து அணி மோதவுள்ளது. இதன் முதல் போட்டி, இன்று ஆரம்பான நிலையில், நியூசிலாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.
மறுபக்கம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக, 20 பேர் கொண்ட இந்திய அணி இன்று கிளம்பவுள்ளனர். நாளை இங்கிலாந்து சென்று சேரும் இந்திய வீரர்கள், சில தினங்கள் குவாரன்டைன் செய்யப்பட்ட பிறகே, பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். முன்னதாக, இங்கிலாந்து கிளம்புவதற்கு முன்பாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri) மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர், ஆன்லைன் மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதில், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர், பதில்களை அளித்த நிலையில், இதற்கு முன்பு, இருவரும் பேசியதாக, ஆடியோ ஒன்று, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்த நிருபர்கள் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக, தாங்கள் லைவ்வில் இருப்பதை மறந்த கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி, ஹிந்தியில் உரையாடியுள்ளனர்.
— Andy (@WeBleedBlue007) June 2, 2021
நியூசிலாந்து அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றிப் பேசிய கோலி, அவர்களைக் கட்டுப்படுத்த, வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். 20 பேர் கொண்ட இந்திய அணியில், எந்தெந்த வீரர்கள் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என்பது பற்றி, பல விதமான கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இதற்கு மத்தியில், கோலி கூறியதாக வலம் வரும் ஆடியோ உண்மையாகும் பட்சத்தில், ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறுவார்கள் என தெரிகிறது. மேலும், கோலி - ரவி சாஸ்திரி தொடர்பான உரையாடலும், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.