"இவர மாதிரி ஒரு 'ஜீனியஸ' கிரிக்கெட்'ல பாக்குறதே ரொம்ப 'அபூர்வம்'.." 'இந்திய' வீரரை தாறுமாறாக பாராட்டிய 'ரமீஸ் ராஜா'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் பார்வையும் தற்போது திரும்பி இருப்பது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் மீது தான்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள இந்த போட்டி, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
இந்த இரு தொடர்களுக்குமான 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், அனைத்து வீரர்களும் இன்னும் சில தினங்களில், இங்கிலாந்து செல்கின்றனர். மேலும், இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அதிக பலத்துடன் விளங்குகிறது. அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் இரண்டற கலந்துள்ள இந்திய அணி, சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை, கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது.
அதிலும் குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் அவர் சாய்த்துள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் உதவுவார் என்ற நம்பிக்கையும் அவர் மீது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரமீஸ் ராஜா (Ramiez Raja), அஸ்வினைப் பாராட்டிப் பேசியுள்ளார். 'அஸ்வின் ஒரு அற்புதமான ஆஃப் ஸ்பின்னர். அவர் பந்தை சுழற்றும் விதம், வெவ்வேறு கோணங்களில் இருந்து பந்து வீசுவது என அனைத்திலும் அவர் தேர்ந்த புத்திசாலி. கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு ஆஃப் ஸ்பின்னர் ஜீனியஸ், அரிதாகவே இருப்பார்கள். எனவே, நீங்கள் அவரை அதிகம் மதிக்க வேண்டும்.
அவர் விக்கெட்டுகளை வேகமாக எடுப்பதை பார்க்கும் போது, தொடர்ந்து ஃபிட்டாக இருந்தால், நிச்சயம் பல சாதனைகளை முறியடிப்பார் என நான் நம்புகிறேன். அவரது சிறப்பம்சம் என்னவென்றால், வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது பந்து வீச்சை மாறுபடுத்திக் கொள்வது தான்.
தூஸ்ரா பந்து வீச்சு இல்லாமலே, ஏராளமான வகைகளில் அவர் பந்து வீசுகிறார். மனதளவில் வலிமையான அஸ்வின், எப்போது எந்த மாதிரியான பந்துகளை, ஒரு பேட்ஸ்மேனுக்கு வீச வேண்டும் என்பதிலும் தேர்ந்த எண்ணம் கொண்டவர்' என ரமீஸ் ராஜா, அஸ்வினுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்
