“இனி அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் இருக்காது”.. கிராமத்தில் நடக்கப்போகும் பதவி ஏற்பு விழா.. ஆரம்பமே அதிரடி காட்டிய ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (10.03.2022) நடைபெற்றது. இதில் பிற்பகல் 2 மணி நிலவரப்படி, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117-ல் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்துள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகள், அகாலி தளம் 3 தொகுதிகள், பாஜக 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
இதனால் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது. இதனை அடுத்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் பஞ்சாப் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்களிடம் பேசிய அவர், ‘பஞ்சாப் முதல்வரின் பதவியேற்பு விழா ராஜ்பவனுக்கு பதிலாக கட்கர் காலன் கிராமத்தில் நடைபெறும். அரசு அலுவலகங்களில் முதல்வரின் புகைப்படங்கள் இடம் பெறாது. அதற்கு பதிலாக அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் படங்கள் இருக்கும். இன்னும் ஒரு மாதத்தில், பஞ்சாப்பில் உண்மையான மாற்றத்தை, நீங்கள் எல்லோரும் பார்ப்பீர்கள்’ என கூறியுள்ளார். கட்கர் காலன், பகத் சிங்கின் பிறந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இனி புதிய இந்தியாவை நாம் படைப்போம். 75 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்சி நடந்துள்ளது’ என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.