VIDEO: 'விட்டா அடிச்சிருவாரு போல'!.. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை... களத்திலேயே கழுவி ஊற்றிய அஃப்ரிடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jun 16, 2021 06:30 PM

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுக்கும், இளம் வீரரான ஷாகீன் அஃப்ரிடிக்கும் இடையே போட்டியின் போது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் நிலவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

shaheen afridi sarfaraz ahmed heated words exchange psl

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் கொரோனா பரவல் காராணமாக அபுதாபியில் நடைபெற்று வருகிறது. நேற்று 23வது லீக் போட்டியில் Lahore Qalandars மற்றும் Quetta Gladiators அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 19வது ஓவரில் ஆடிக்கொண்டிருந்த போது, அந்த ஓவரில் மிக உயரமான பவுன்சர் ஒன்றை ஷாகீன் அஃப்ரிடி வீசினார்.

பவுன்சராக வீசப்பட்ட பந்து, பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் ஹெல்மெட்டை பதம் பார்ததுவிட்டு, விக்கெட் கீப்பரை கடந்து 3rd man திசைக்கு சென்றது. அந்த நேரத்தில் ரன் எடுப்பதற்காக மறு முனைக்கு வந்த சர்ஃபராஸ் அகமது, பவுன்சர் வீசிய அஃப்ரிடியை நோக்கி ஏதோ பேசியுள்ளார்.

இதனால் கோபமடைந்த அப்ரிடி, முன்னாள் கேப்டன் மற்றும் சீனியர் என்றும் பார்க்காமல், உடனடியாக அவருடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டார். சர்ஃபராஸ் அகமதுவின் அருகில் சென்று அவர் ஆக்ரோஷமான சைகைகளை செய்ததால் நடுவர்கள் மற்றும் களத்தில் இருந்த வீரர்கள் ஓடோடி வந்து, இருவருக்கும் இடையேயான மோதலைத் தவிர்த்து விலகிச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இவர்களுக்கு இடையிலான இந்த திடீர் மோதல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பிறகு, இன்னிங்ஸ் முடிவில் அஃப்ரிடியின் நடத்தை குறித்து அம்பயரிடம் பேசியவாறு சர்ஃபராஸ் அகமது சென்றார்.

பொதுவாக கிரிக்கெட்டில் சீனியர்களை, ஜூனியர்கள் மதித்து நடப்பது என்பது ஒரு பண்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த விஷயம் தான் பாகிஸ்தான் அணியின் குறைபாடாக இருப்பதாக முன்னாள் வீரர் வசீம் அக்ரம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவர் கூறியதை உண்மையாக்கும் வகையில் தான், அஃப்ரிடி மற்றும் சர்ஃபராஸ் அகமது இடையிலான வாக்குவாதம் இருந்ததாக சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்துகளை கூறிவருகின்றனர்.

சர்ஃபராஸ் தனக்கு சீனியர் என்ற முறையில் அஃப்ரிடி கொஞ்சம் பொறுமையை கையாண்டு இருக்கலாம் எனவும், பவுன்சர்கள் என்பது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் என்பதால் சர்ஃபராஸ் இதை பெரிதுபடுத்தியிருக்கக்கூடாது என இரண்டு தரப்பு மீதும் குற்றம் சுமத்தி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து கூறியதை பார்க்க முடிந்தது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shaheen afridi sarfaraz ahmed heated words exchange psl | Sports News.