பச்சை கொடி காட்டிய பிசிசிஐ!.. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு செம்ம வாய்ப்பு!.. இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ எடுத்துள்ள புதிய முடிவால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இலங்கை சுற்றுப்பயணத்தில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக இலங்கை சுற்றுப்பயணத்தை பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு சீனியர் வீரர்கள் ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் முதல் சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இவர்களுக்கு மேலும் இரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது, பிசிசிஐ. இந்திய அணியில் தேர்வாகும் வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் யோ யோ உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். மேலும், வீரர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் 2 கி.மீ தூரம் ஓட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், இலங்கை சுற்றுப்பயணத்திற்கு இது எதுவுமே தேவை இல்லை என பிசிசிஐ விலக்கு அளித்துள்ளது. கொரோனா காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசிஐ-ன் இந்த முடிவால் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி விளையாடுவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஏனெனில், 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய வருண் சக்கரவர்த்திக்கு ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் விளையாட அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதற்காக நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் 2 முறையுமே தோல்வியடைந்து வாய்ப்பை தவறவிட்டார். எனினும், இந்த முறை அந்த உடற்தகுதி தேர்வு இல்லை என்பதால் நிச்சயம் வருண் சக்கரவர்த்தி ப்ளேயிங் 11ல் கூட இடம் பிடிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி தற்போது ஃபார்ம் அவுட்டாகி உள்ளனர். இவர்களுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தியை அணியில் இணைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதால், இலங்கை தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் அவர் நிரந்தர இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.