'அஷ்வின் 'ALL TIME GREAT' ப்ளேயரா இல்லையா?.. இந்திய அணிக்கு அவர் பங்களிப்பு என்ன?.. சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்துக்கு முன்னாள் வீரர் பதிலடி!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅஷ்வின் திறமை குறித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனத்துக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

இந்திய வீரர்கள் சிலரை தனது கருத்துகளால் அடிக்கடி விமர்சிப்பவர் சஞ்சய் மஞ்சரேக்கர். ஆனால், சம்பந்தப்பட்ட வீரர் மனதை காயப்படுத்தும் வகையில் அவரது விமர்சனம் இருப்பது தான் சிக்கல். ரவீந்திர ஜடேஜாவை Bits and Pieces என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய சஞ்சய், சமீபத்தில் அஷ்வினை All Time Great எனக்கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பேசிய சஞ்சய், ரவிச்சந்திரன் அஷ்வின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் விளையாடி வருவதை பார்க்கும் போது அவர் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன். ஆனால், எல்லா காலத்திலும் சிறந்த வீரர் என மக்கள் அவரை கூறுவதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். அஷ்வினிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், SENA என கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் உள்ள மைதானங்கள் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு உகந்ததாகும்.
ஆனால், இந்த நாடுகளில் அஷ்வின் ஒரு முறை கூட 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டுமே அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார். இந்திய ஆடுகளங்கள் அவருடைய ஸ்பின்னுக்கு ஏற்றார்போல் இருப்பதால்தான் அவரால் இங்கு விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது.
அஷ்வினைப் போலவே தான் ரவீந்திர ஜடேஜாவும், இந்திய ஆடுகளங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை கொண்டவர். அதே போல கடந்த இங்கிலாந்து தொடரில் இந்திய ஆடுகளங்களில் அஷ்வினைவிட அக்சர் பட்டேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றினார். பல வீரர்களும் இப்படி இருக்கும் போது அஷ்வினை எப்படி அனைத்து கால சிறந்த பவுலர் எனக் கூறுவது?" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மஞ்ச்ரேக்கரின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விவிஎஸ் லக்ஷ்மன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "அஷ்வின் ஒரு உயர் ரக ஆஃப் ஸ்பின்னர். இந்தியாவில் அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிப் பெற வைப்பது மட்டுமின்றி, அண்மையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் பந்து வீசிய விதம், வெளிநாடுகளிலும் அவர் எந்தளவுக்கு சிறப்பானவர் என்பதைக் காட்டியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ரன் விகிதத்தை அவர் கட்டுப்படுத்திய விதம், 2020-21 டெஸ்ட் தொடரின் போது ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றிய விதம், அவர் நம்பிக்கையின் உச்சத்தை காட்டுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நான் நிச்சயமாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களையும் களமிறக்க வேண்டும் என்பேன். ஏனெனில், ரவீந்திர ஜடேஜா சமீப காலங்களில் விளையாடிய விதம், வெறும் கேமியோ என்பதைத் தாண்டி, பிரஷரான நேரத்தில் மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்பதையும் நிரூபித்து இருக்கிறார். மெல்போர்னில் விக்கெட்டுகள் சரிந்த பிறகு, ரஹானேவுடன் அவர் ஏற்படுத்திய பார்ட்னர்ஷிப் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
ரவீந்திர ஜடேஜா 7 வது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவார். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால், அது அணிக்கு சாதகம். பந்துவீச்சாளராக அவர் பெரிய அளவில் முன்னேறிவிட்டார். ஒரு டெஸ்டின் முதல் நாளிலேயே பேட்ஸ்மேனை அவரால் அவுட் செய்ய முடியும்" என்று ஜடேஜாவையும், அஷ்வினையும் புகழ்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்
