WTC FINAL: ‘அதை பார்த்தா பிராக்டீஸ் மேட்ச் மாதிரியே தெரியல’!.. என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு.. நியூஸிலாந்து வீரருக்கு ‘பயம்’ காட்டிய இந்திய அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி குறித்து நியூஸிலாந்து அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் புகழ்ந்து பேசியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான நியூஸிலாந்து அணியில் இடம்பெற்றிருக்கும் ராஸ் டெய்லர் பேட்டில் ஒன்றில் இந்திய அணியை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘இந்திய அணி அதன் சொந்த மண்ணில் மட்டுமல்ல, மற்ற நாட்டு மைதானங்களில் விளையாடும்போது கூட வலுவான எதிரணியாகதான் இருக்கும். இளம்வீரர்கள் பல பேர் அந்த அணியில் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். முன்னதாக நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இளம்வீரர்களால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அதனால் இந்த இறுதிப்போட்டிக்கு எந்த மாதிரியான ப்ளேயிங் லெவனோடு களமிறங்க வேண்டும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள்’ என ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘நாங்கள் இந்த இறுதிப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதனால் சில விஷயங்களை எங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இந்திய அணிக்கு அப்படி எதுவும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் அவர்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தைப் பார்த்தால், அதை அவர்கள் பயிற்சி போட்டியாக நினைத்து விளையாடியதுபோல் தெரியவில்லை. ஒவ்வொரு வீரரும் தங்களது திறமையை வெளிக்காட்டியுள்ளனர். கொடுக்கப்பட்ட சிறிது நாட்களில் அவர்கள் இப்படி தயாராகி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பேட்டிங் மட்டுமில்லாமல் அவர்களின் பவுலிங் வரிசையும் மிக வலுவானதாகவே இருக்கிறது’ என இந்திய அணியை ராஸ் டெய்லர் புகழ்ந்து பேசியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணிக்கு இதுபோல் வாய்ப்பு அமையவில்லை. அதனால் இந்திய வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடினர். அப்போது பல வீரர்கள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பந்த் சதமும், சுப்மன் கில் அரைசதமும் அடித்து அசத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.