ஐபிஎல் ஏலத்துல கலந்துக்கல.. திடீர் ‘ஷாக்’ கொடுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்.. என்ன காரணம்..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமெகா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கவில்லை என சிஎஸ்கே அணியில் விளையாடிய இளம் வீரர் அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 14-வது சீசன் ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (CSK) சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
இதனிடையே புதிய அணிகளான அகமதாபாத் அணி ஹர்திக் பாண்ட்யா, ரஷித்கான், சுப்மன் கில் ஆகியோரையும், லக்னோ அணி கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரையும் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், லக்னோ அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அனைத்து அணிகளும் தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி ஆகிய 4 வீரர்களை தக்க வைத்தது. அதனால் சிஎஸ்கே அணியில் விளையாடிய மற்ற வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த சூழலில் சிஎஸ்கே அணியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் கர்ரன் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக சில காலம் ஓய்வு எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணியின் முக்கிய ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் சாம் கர்ரன். அதனால் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் அவரை எடுக்க சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் அவர் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
