இது மட்டும் நடந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் கோலியாதான் இருப்பார்.. முன்னாள் கோச் சூசகமாக சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஏபி டிவிலியர்ஸ் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக முன்னாள் பயிற்சியாளர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் (IPL) தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் அகமதாபாத், லக்னோ என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியிலும் உள்ள வீரர்கள் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியது. அதன்படி அனைத்து அணிகளும் தங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் (Virat Kohli, Glenn Maxwell and Mohammed Siraj) ஆகிய 3 வீரர்களை தக்க வைத்துள்ளது.
முன்னதாக ஆர்சிபி அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா வீரர் ஏபி டிவில்லியர்ஸ் (AB De Villiers) அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆர்சிபி அணியில் விராட் கோலிக்கு அடுத்து முக்கிய நட்சத்திர வீரராக இருந்தவர். ஏபி டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வை அறிவித்தது விராட் கோலிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் ஆர்சிபி அணிக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் (Sanjay Bangar) தெரிவித்துள்ளார். அதில், ‘ஏபி டிவில்லியர்ஸை ஆர்சிபி அணி இழந்துவிடக்கூடாது. ஒவ்வொரு அணிக்கும் பேட்டிங் பயிற்சியாளர் என்பவர் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். அதனால் ஏபி டிவில்லியர்ஸை ஆர்சிபி அணி பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்க முயற்சி மேற்கொள்ளும் என நினைக்கிறேன்.
ரன் எடுக்க சிரமப்படும் நேரங்களில் டிவில்லியர்ஸ் இடம்தான் ஆலோசனை பெறுவேன் என முன்பு ஒருமுறை விராட் கோலி கூறியிருந்தார். அதனால் அவர் ஆர்சிபி அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டால் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏபி டிவில்லியர்ஸிக்கு ஆர்சிபி அணி அழைப்பு விடுக்கும் என்றே நினைக்கிறேன்’ என சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பேட்டிங் ஆலோசகராக சஞ்சர் பங்கர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
